பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 910 ஆக உயர்வு -ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒருவர்

வி.சுகிர்தகுமார்
பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்திலும்; அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களிலும் மக்களது செயற்பாடுகள் யாவும் இயல்பு நிலைக்கு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.
போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களும் தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபட்டன. இந்நிலையில் பஸ் தரிப்பிடத்திலும் அதிகளவான பயணிகள் தரிந்திருந்ததை காண முடிந்தது.
இதேநேரம் அரச திணைக்களங்களின் செயற்பாடுகள் மற்றும் வங்கிச்சேவைகள் வழமைபோன்று இடம்பெற்றதுடன் சில வங்கிகளுக்கு அதிகளவான மக்கள் சென்றதையும்; பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒருவர் கொரோனா தொற்றாளர் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அன்ரிஜன் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன.
ஆயினும் அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 910 ஆக உயர்வடைந்துள்ளதுடன்; கல்முனை பிராந்தியத்தில் 73 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதையும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்களை மேற்கொண்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.
அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் வெளியேறுவதை முற்றாக தவிர்ப்பதுடன் அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைவாக செயற்படுமாறும் அரசுக்கும் சுகாதாரதுறைக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
ஆயினும் மதுபானசாலை உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டு வருவதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.