இலங்கை

பெருநாள் தினத்தில் கறுப்பு கொடியை பறக்கவிட்டு துக்கதினம் அனுஸ்டிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் விடுத்த கோரிக்கையினை கண்டித்து பொத்துவில் பிரதேசத்தில் இன்று கவனயீர்ப்பு

வி.சுகிர்தகுமார்   

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெருநாள் தினத்தில் கறுப்பு கொடியை பறக்கவிட்டு துக்கதினம் அனுஸ்டிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் விடுத்த கோரிக்கையினை கண்டித்து பொத்துவில் பிரதேசத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.

பொத்துவில் மத்திய பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு சுலோக அட்டைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளுடன் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் நோன்பை சங்கை செய்த முஸ்லீம்களை கறுப்பு கொடி ஏந்தச் செய்வது நியாயமா?  ஏந்த வேண்டியது கறுப்பு கொடியல்ல எமது சிங்கக் கொடி, பொது தேசிய கொடி, உமக்கு கஞ்சிக் கோப்பை எமக்கு கறுப்பு கொடியா?  உங்கள் வாழ்விற்கு இவ்வூர் மக்களும் சமூகமும் இரையா? இது முறையா போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர்.

இதன் பின்னர் சிலர் ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்தனர்.

நாம் தொடர்ந்தும் பெரும்பான்மை சமூகத்தோடும் அரசோடும் எதிர்த்து செயற்படுவது பொருத்தமல்ல.  இது நமது நாடு. முஸ்லிம் மக்களுக்கும் உரிய நாடு எனும் அடிப்படையில் சகல சமூகங்களுடனும் இணைந்து வாழ வேண்டும். இங்கு இனவாதம் மதவாதத்துடன் வாழ முடியாது. எங்களது குழந்கைளை எதிர்காலத்தில் இனவாதியாக சித்தரிக்க இடமளிக்க கூடாது.

இந்நிலையில் ஒரு புறம் அரசோடு நன்றாக உறவாடிவிட்டு மறுபுறம் மக்களிடம் அரசுக்கு எதிராக செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஊர் மக்களின் கருத்துக்களை கேளாது தான்தோன்றிதனமாக இவர்கள் முடிவெடுக்கின்றனர். இவ்வாறான நாடகங்கள் இனி நடக்கு அனுமதிக்க முடியாது. இதனை பொதுமக்கள் ஆகிய நாங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம் என்றார்.

சகரான் என்கின்ற தீவிரவாதியினால் நடைபெற்ற அந்த கீழ்த்தரமான வேலையினால் நாம் அழிவுகளை சந்தித்து தற்போது அதில் இருந்து மீண்டு வருகின்றோம். இந்த நேரத்தில் கறுப்பு கொடி அல்லது சிவப்பு கொடி வெள்ளை கொடி எல்லாம் அப்பாற்பட்ட விடயம். ஆகவே இவ்வாறான விடயங்களை தவிர்த்து இந்த ஜனநாயக நாட்டிலே நாம் அனைத்து இனங்களோடும் ஜக்கியமாக வாழ்வோம் என்றார்.

இதேநேரம் இன்னுமொருவர் கூறுகையில் தேர்தல் காலத்தில் மொட்டு ஹராம் என்று அரசாங்கத்தை கேவலமாக பேசியவர்கள் இன்று அங்கு சென்று கஞ்சி குடிக்கின்ற வராலறுகளும் உள்ளது. இந்த நிலையில் மக்கள் 30 நாட்களும் நோன்பு நோர்த்து சந்தோசமாக கொண்டாட வேண்டிய பெருநாளை கறுப்பு கொடியேற்றி துக்கதினம் அனுஷ்டிக்குமாறு கேட்கின்றார். உலகத்தில் பெருநாள் தினத்தில் கறுப்பு கொடியேற்றிய வரலாறு உள்ளதா? ஏன நான் அவரிடம் கேட்கின்றேன் என்றார் மற்றுமொருவர். மேலும் இந்த போராட்டமானது அரசியலோ அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிரானதோ அல்ல. மக்களின் நலன் சார்ந்ததே என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker