இலங்கை

முஷாரப் எம்.பிக்கு அரசியலறிவு போதாது : கறுப்புக்கொடி விவகாரம் மக்கள் காங்கிரசின் முடிவல்ல, அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு – மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் அறிவிப்பு

 

தலைவர் றிஸாத்தின் கைதை கண்டித்து பெருநாள் தினத்தன்று கறுப்புக்கொடி பறக்கவிடுங்கள் எனும் கோரிக்கையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கோரிக்கையல்ல. அது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே. அண்மையில் அவர் பொத்துவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடக்காத பல செய்திகளை நடந்ததாக கூறினார். அவரின் நடவடிக்கைகளினால் மிகப்பெரும் வேதனையுடன் மக்கள் காங்கிரசின் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் என புதன்கிழமை இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு நிந்தவூரில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களான அக்கட்சியின் தேசியக்கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கே.எம்.ஏ. ரஸாக், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஸ்ரப் தாஹீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் ஆகியோர் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் மன்னராட்சியிலும் சரி, சுதந்திரத்திற்கு பின்னரான அரசாங்கங்களிலும் சரி முஸ்லிங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது சிலரின் நடவடிக்கைகளினால் அந்த நிலையில் மாற்றம் உள்ளதாகவே தெரிகிறது. கடந்த 04.05.2021 அன்று நடைபெற்ற உயர்பீட கூட்டத்தில் சட்டரீதியாக பிரச்சினைகளை அணுகவேண்டி கட்சியின் சிரேஷ்ட பிரதித்தலைவரை பதில் தலைவராக தற்காலியமாக நியமித்து அதிகாரங்களை வழங்கினோம். இதில் வேறு எவ்வித உள்நோக்கங்களுமில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு அதிகமாக வாக்களித்த மக்கள் அம்பாறை மாவட்ட மக்களே. இங்கு கட்சிக்கென்று நிர்வாக கட்டமைப்பு இருக்கிறது. மாவட்ட செயற்குழுவுடன் இணைந்து பணியாற்றாமல், அந்த செயற்குழுவுடன் கலந்துரையாடாமல் தனது விருப்பத்தின் பிரகாரம் பொறுத்துவாய்ந்த ஒருவர் அறிவிப்புக்களை விடுவது நல்லதல்ல.

கலந்தாலோசனைகள், தலைமைத்துவ வழிகாட்டல்களை பின்பற்றாமல் எந்தவித போராட்டங்களும் வென்றதாக வரலாறுகள் இல்லை. தலைவரை விடுவிக்க போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பெருநாளை இப்படி எதிர்ப்புநாளாக மாற்றுவது முறையல்ல. அண்மையில் கூட ஒரு கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பும், அவரது ஆதரவாளர்களும் பதாதைகளை தூக்கிக்கொண்டு போராடுவது நல்லமல்ல என்றார்கள். மறுநாள் அவர்களே முஷாரப் எம்.பியின் தலைமையில் போராட்டம் நடப்பதாக அறிவித்தார்கள். இப்படி பல சம்பவங்கள் உள்ளது.

ஹரீன் எம்.பி சகல பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் வரை கருப்பு சால்வை அணியப்போவதாக அறிவித்தது போன்று எங்கள் எம்.பியும் தலைவரின் விடுதலையை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து பாராளுமன்றம் செல்ல வேண்டும். இதுவரை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் காட்டிய எதிர்ப்பு அளவுக்கும் அவர் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு காட்டவில்லை. கருப்பு கொடி கட்டும் விவகாரமாக ஊர் பிரமுகர்களிடத்திலோ, உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கோ அவர் இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை.

மாவட்ட குழுவுடன் இணைந்து பணியாற்றுமாறு பல தடவைகள் தலைவர் அவருக்கு அறிவுறுத்தியுமவர் அதனை பின்பற்ற வில்லை. இளைஞர் அவர். அவருக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை. அவர் கட்சியில் தனிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பலதடவைகள் அவருக்காக நாங்கள் பேசியிருக்கிறோம். தலைவர் கடுமையாக சிறையில் கஷ்டப்படுகிறார். தூங்க தலையணை கூட இல்லை. ஆனால் இங்கு இப்தார் செய்து கொண்டு இருக்கிறார்கள். 20க்கு ஆதரவளித்த ஏழுபேரும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள். எங்களின் முடிவை தெளிவாக அறிவித்துள்ளோம். கட்சியின் வரம்பை மீறி போர்ட் சிட்டிக்கு ஆதரவாக எங்கள் கட்சி எம்.பிக்கள் வாக்களித்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் .
நடுநிசியில் கைது செய்யப்பட்ட தலைவர் றிசாத், ஆசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்,உலமாக்கள், மார்க்க அறிஞர்களை விடுதலை செய்யக்கோரி எங்களின் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். தலைவரின் கைதின் பின்னணியில் 20க்கு கையுயர்த்திய இவர்களே இருக்கிறார்களா? எனும் சந்தேகம் எனக்குள் இருக்கிறது. சரிந்த செல்வாக்கை மீள கட்டியெழுப்ப இவர்களின் பின்னணியுடன் தான் இது நடந்திருக்குமா என சந்தேகிக்கிறேன் என்று நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஸ்ரப் தாஹிர் இதன்போது தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker