20 கோடி ரூபா ஒதுக்கீட்டிலான கிராமி வீதிகள் நிர்மாணிப்பு பணிகள்

வி.சுகிர்தகுமார்
ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய சௌபாக்கிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் 20 கோடி ரூபா ஒதுக்கீட்டிலான வீதிகள் நிர்மாணிப்பு பணிகள் அக்கரைப்பற்று மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளர் ஐ.எச்.வஹாப்பின் முயற்சியின் பயனாக அரசாங்கத்தின் கிராமி வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த வீதிகள் கொங்கிறீட் வீதிகளாக மாற்றம் பெற்று வருகின்றன.
இதற்கமைவாக குறித்த பகுதிகளில் நிந்தவூர் தோப்புக்கண்ட வீதி, அக்கரைப்பற்று 20, 21 பொது வீதி, அக்கரைப்பற்று தேசியபாடசாலை மேற்கு வீதி, தீகவாபி வீதி, அக்கரைப்பற்று ஈச்சம்பத்து தருகாபள்ளி வீதி, இலுக்குச்சேனை வண்ட் றோட், அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு குறுக்கு வீதி, பள்ளிக்குடியிருப்பு இசங்கனிசேனை குறுக்கு வீதி உள்ளிட்ட 8 வீதிகள் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த வேலைத்திட்டம் இடம்பெற்றுவரும் இடங்களை சென்று நேரில் பார்வையிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளர் ஐ.எச்.வஹாப் வீதி அபிவிருத்தி வேலைகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதேநேரம் குறித்த வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி பிரதமர் அமைச்சர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.