மீண்டும் கடத்தல் யுகம் ஆரம்பமா?கோட்டாபயவிடம் எழுப்பப்பட்ட கேள்வி

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் மீண்டும் கடத்தல் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளதா என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
ஊடகவியலாளர் ஒருவர் (இணைய ஊடகமான ‘சியரட்ட’வின் ஊடகவியலாளர் சுஜீவ கமகே) கடத்தப்பட்டு, கறுப்புநிற வானில் ஏற்றப்பட்டதுடன் அவரது செய்திமூலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களைக் கூறுமாறு சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து அவர் வீதியோரத்தில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களே, மீண்டும் கடத்தல் சம்பவங்கள் தொடர்வதை நீங்கள் அனுமதிக்கப்போகின்றீர்களா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதேவேளை இவ்விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவொன்றைச் செய்திருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான யுகத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் கடந்த 10 ஆம் திகதி ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டதுடன் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டிருக்கிறார். தமது சகா ஒருவர் பாதிப்பிற்குள்ளாகும் வேளையில் ஏனைய ஊடகங்கள் அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தாமை பெரிதும் கவலையளிக்கின்றது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் என்பது பற்றி உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.