வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை ஜாம்பவான்கள் அணி!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 10ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ராய்பூர் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் பங்களாதேஷ் ஜாம்பவான்கள் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஜாம்பவான்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை ஜாம்பவான்கள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, உபுல் தரங்க ஆட்டமிழக்காது 99 ஓட்டங்களையும் டில்சான் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் ஜாம்பவான்கள் அணியின் பந்துவீச்சில், ஷெரீப், சலே மற்றும் ரபீக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இலங்கை ஜாம்பவான்கள் அணி 42 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது பங்களாதேஷ் ஜாம்பவான்கள் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நஸிமுதீன் 54 ஓட்டங்களையும் காலீத் மசூத் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்
இலங்கை அணியின் பந்துவீச்சில், டில்சான் 3 விக்கெட்டுகளையும், தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்டுகளையும் ரஸ்ஸல் ஆர்னல்ட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஆட்டமிழக்காது 99 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இலங்கை ஜாம்பவான்கள் அணியின் உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டார்.