அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாடுவது மறு அறிவித்தல்வரை முற்றாக தடை! எஸ்.அகிலன்

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாடுவது மறு அறிவித்தல்வரை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை மீறி செயற்படுவோர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு அவர்களை கைது செய்து தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பர் எனவும் கூறினார்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்குள் வாகனங்கள் நுழைவதற்கும் இங்கிருந்து வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப்பொருட்களை வெளிப்பிரதேசத்தில் இருந்த ஏற்றிவரும் வாகனங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள எல்லை பிரதேசத்தில் நிறுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் உள்ள வாகனம் ஒன்றில் மாற்றப்பட்டு கொண்டு வருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இறுக்கமான சூழலில் இவ்வாறான தீர்க்கமான முடிவுகள் மூலமே எமது உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியும் எனவும் இது நமது ஒவ்வொருவரினதும் பொறுப்பும் என்றார்.
மேலும்; மக்கள் வழங்கும் ஒத்துழைப்பின் மூலம் மாத்திரமே கொரோனாவை எமது பகுதியில் இருந்து முற்றாக ஒழிக்க முடியும் எனவும் இதனை உணர்ந்து மக்கள் செயற்படுவர் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய பிரதேச செயலகத்தினூடாக வர்த்தகர்களின் உதவியோடு நடமாடும் விற்பனை சேவையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.