கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் மரநடுகை மற்றும் கடற்கரையினை தூய்மைப்படுத்தும் சிரமதான நிகழ்வும்

வி.சுகிர்தகுமார்
அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கமைவாக கடல் சூழலை பேணிப்பாதுகாப்பதற்காக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் மரநடுகை மற்றும் கடற்கரையினை தூய்மைப்படுத்தும் சிரமதான நிகழ்வு இன்று இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட கடல் சுற்றாடல் உத்தியோகத்தர் கி.சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் கலாநிதி பி.வி.ரேனி பிரதீப் குமார கலந்து கொண்டதுடன் 241ஆம் படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் ஜானக விமலரெத்தின விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மரநடுகை திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி அனைவருக்கும் மாவட்ட கடல் சுற்றாடல் உத்தியோகத்தர் கி.சிவகுமார் நன்றி கூறினார். தொடர்ந்து மாநடுகை தொடர்பான அரசாங்கத்தின் நோக்கம் தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் இடம்பெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் கலாநிதி பி.வி.ரேனி பிரதீப் குமார விளக்கினார். மேலும் மரநடுகை திட்டத்தினை பேணிப்பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாகவும் கூறினார்.
இதன் பின்னராக அனைவரும் இணைந்து அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் வளாகத்தினுள் தென்னை மற்றும் முந்திரிகை மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
தொடர்ந்து சின்னமுகத்துவாரக் கடற்கரை பிரதேசத்தில் தேங்கிகிடந்த பிளாஸ்டிக் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.
நிகழ்வில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வடகிழக்கு உதவி முகாமையாளர் தி.சிறிபதி 241ஆம் படைப்பிரிவின் சமூக இணைப்பாளர் சமிந்த புஸ்பசிறி கரையோர பேணல் திணைக்கள உத்தியோகத்தர் அரச திணைக்கள அதிகாரிகள் இராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேநேரம் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் கலாநிதி பி.வி.ரேனி பிரதீப் குமார ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.