சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்- உறவுகள் அறிவிப்பு

சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் வேலையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் திறக்கப்படுவதை உடனடியாக நிறுத்தக் கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் (வெள்ளிக்கிழமை) காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக தவிசாளருக்கு அவரச கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முதலில் சாட்சியங்களுடன் வழங்கப்பட்டுள்ள காணாமலாக்கப்பட்ட ஐந்து பேர் குறித்து தேடித் தீர்வைத் தந்துவிட்டு வடக்கு கிழக்கில் அலுவலகம் திறப்பதே ஏற்புடையதாகும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த மே 15ஆம் திகதி கலந்துரையாடியதற்கு அமைவாக உறுதிப்படுத்தும் சாட்சியமுள்ள காணாமல் ஆக்கப்பட்ட ஐந்து பேரின் விபரங்களை தரும் பட்சத்தில் அவற்றை தாம் தேடிக் கண்டுபிடிப்பதாக எம்மிடம் நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சாட்சியமுள்ள ஐவரின் விபரங்களை தந்துள்ளோம்.
அவற்றுக்கு இதுவரை எதுவித பதிலும் இல்லாத சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை திறக்க முற்படுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான உங்களின் கைங்கரியமே. இவ்வாறு பாதிக்கப்பட்ட தரப்பை ஏமாற்றும் உங்கள் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
குறித்த சாட்சியமுள்ள ஐந்து பேர் குறித்து தீர்வைத் தந்து விட்டு வடக்கு கிழக்கில் அலுவலகம் திறப்பதே ஏற்புடமையாகும். ஆகவே இந்த அலுவலகம் திறப்பதை நிறுத்துமாறு தங்களைக் கேட்டுக்கொள்வதுடன் அவ்வாறு எமது கோரிக்கைக்கு மாறாக திறப்பீர்களாயின் எமது உறவுகள் திரண்டு போரட்டம் நடத்துவோம் என்பதையும் மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.