பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேக பெரும்சாந்தி

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேக பெரும்சாந்தி குடமுழுக்கு பெருவிழா நேற்று 28ஆம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் 7.20 மணிவரையுள்ள சுக்கிலபட்சத்து தசமி திதியும் மூல நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் இறைவன் திருவருளால் இடம்பெற்றது.
கடந்த 24 ஆம் திகதி அதிகாலை கருமாரம்ப கிரியைகளோடு ஆரம்பமான கும்பாபிசேக பெருவிழாவின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வானது
25 ஆம் திகதி நண்பகல் 11.55 தொடக்கம் 26 ஆம் திகதி 4.00 மணிவரை இடம்பெற்றது.
தொடர்ந்து கிரியைகள் இடம்பெற்றதுடன் 28 ஆம் திகதி காலை 6.00 மணிமுதல் 7.20 மணிவரையுள்ள சுபமகூர்த்தத்தில் வேதோத்திர பாராயணங்கள் முழுங்க மாதுமை அம்பிகா சமேத ஸ்ரீP பாசுபதேசுவரருக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு இடம்பெற்று பெரும்சாந்தி விழா நடைபெற்றது.
ஆலய தலைவர் மா.இரகுநாதன் தலைமையில் இடம்பெறும் கும்பாபிசேக கிரியைகள் யாவும் கும்பாபிசே பிரதிஸ்டா பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ பாலகுகேஸ்வர சிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் ஆலய பிரதமகுரு வித்தயாசாகரர் சிவஸ்ரீ புண்ணிய கிருஸ்ணகுமாரக்குருக்கள் மற்றும் ஈசான சிவாச்சாரியார் கிரியாதிலகம் சிவஸ்ரீ அ.மூர்த்தீஸ்வரக்குருக்கள் ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்றது.
அதிகாலை கும்பம் உள்வீதி உலா இடம்பெற்றதுடன் பரிவார மூர்த்திகள் குடமுழக்கு செய்யப்பட்டன. தொடர்ந்து அடியார்கள் புடைசூழ அரோகாரா எனும் பக்தர்களின் வேண்டுதலுடன் பிரதான கும்ப வெளிவீதி உலா இடம்பெற்று மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரருக்கும் குடமுழுக்கு இடம்பெற்றது.
ஈழ வளதிருநாட்டின் கிழக்கே மீன்பாடும் தேனாடாம் மட்டு நகருக்குத் தெற்கே அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நகரிலிருந்து இருமைல்களுக்கு அப்பால் சாகாமம் வீதியில் பனங்காடு என்னும் பெயரில் அழகிய கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றி வற்றாத ஜீவநதியாக தில்லைநதி வளைந்து பாய்கின்றது. செந்நெல் விளையும் செழிப்பு மிகு வயல் நிலங்கள் நிறைந்து விளங்குகின்றன. கடல்,ஆறு, குளம் ஆகிய மூன்று நீர் நிலைகளும் முறையுற அமைந்து மேலும் இக்கிராமத்தை அழகூட்டுகின்றன. இத்தகைய இயற்கை எழில்கள் நிறைந்த இக்கிராமத்தில் கிழக்கே முதலும் முடிவும் இல்லா முழுமுதற் பெருமான் ஸ்ரீ பாசுபதேசுவரர் என்ற நாமத்தோடு அன்னை ஸ்ரீ மாதுமை அம்பாள் சகிதம் வீற்றிருந்து அருள் பாலித்தருளுகின்றமை குறிப்பிடத்தக்கது.