கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவரா? ட்ரம்ப் மறைமுக தகவல்

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்று தான் கேள்விப்பட்டுள்ளதாக விமர்சகர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகின்றன.
இதனிடையே நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த ட்ரம்ப்,
‘கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று மிகவும் திறமை வாய்ந்த வழக்கறிஞர் ஒருவர் கட்டுரையொன்று எழுதியுள்ளதாக நான் இன்று அறிந்தேன். அது சரியான கருத்தா என்று எனக்கு தெரியாது.
ஆனால், அவரை துணை குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னர் இதுகுறித்து ஜனநாயக கட்சியினர் பரிசோதித்து இருப்பார்கள் என்று கருதுகிறேன். எனினும், அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்பதால் அவருக்கு போட்டியிட தகுதியில்லை என்று கூறப்படுவதால் இதுவொரு தீவிரமான விவகாரம்’ என கூறினார்.
கமலா ஹாரிஸ் பிறக்கும்போது அவரது பெற்றோர்கள் அமெரிக்காவில் மாணவர்களுக்கான விசாவில் இருந்திருந்தால், அவரது பிறப்பு அமெரிக்காவின் அதிகார எல்லைக்குட்பட்டதாக இல்லாமல் இருக்கலாம் என்று பேராசிரியர் ஈஸ்ட்மேன் வாதிடுகிறார்.
துணை ஜனாதிபதி பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ் ஆவார்.