இலங்கை

இராவணன் இஸ்லாம் மதத்தவர் என்று கூறியதைப்போல் விபுலானந்தரையும் மாற்றிவிடுவார்கள்- கருணா எச்சரிக்கை!

தமிழர்களை கிழக்கில் கூண்டோடு ஒழிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர் எனவும் கிழக்கு மாகாணத்தில் இருப்பினை தக்கவைப்பதற்கான வழியை முதலில் பார்க்க வேண்டும் என்றும் மிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அண்மையில் ஒருவர் இராவணன் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார் என்றும் எதிர்காலத்தில் காரைதீவு சந்தியில் உள்ள விபுலானந்தர் சிலைக்கும் தொப்பியைப் போட்டு இவர் எங்களினத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லும் நிலையும் உருவாகலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு,  கோட்டைக் கல்லாறில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “கடந்த மாகாணசபைக் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 11 உறுப்பினர்கள் வழங்கப்பட்டபோது அதனை ஏழு ஆசனங்கள் வைத்திருந்த முஸ்லிம்களிடம் தூக்கி வழங்கிவிட்டார்கள். அதனை அவர்கள் பயன்படுத்தி அவர்களது பகுதிகளில் தொழில்வாய்ப்புகளையும் அபிவிருத்திகளையும் செய்துவிட்டார்கள்.

இப்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உபதலைவராக இமாம் என்னும் முஸ்லிம் இருக்கின்றார். மறுபுறம் பிள்ளையானின் கட்சியில் உபசெயலாளர் அசாத் மௌலானா இருக்கின்றார். இவர்கள்தான் பிள்ளையானை உள்ளுக்குள் அனுப்பியுள்ளனர்.

கிழக்கு மாகாண வரலாற்றில் இனியொரு முஸ்லிம் முதலமைச்சர் வருவதற்கு நாங்கள் அனுமதிக்கக் கூடாது. சிங்கள சகோதரர்களுடன் இணைந்து நாங்கள் அந்த முதலமைச்சரை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மஹிந்த, கோட்டா அரசாங்கம் குறைந்தது 20 வருடங்களுக்கு நீடிக்கும். இந்த 20 வருடங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டும். இந்த அரசாங்கத்திற்கும் எனக்குமிடையில் நல்ல நெருக்கம் இருக்கின்றது. எவ்வளவோ எனக்கு எதிராக கூக்குரலிட்டார்கள். ஆனால் எதுவும் செய்யமுடியவில்லை. கடுவெலயில் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர். அதனை நீதிமன்றம் தூக்கியெறிந்துவிட்டது.

அரசியல் மேடைகளில் பேசுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க முடியாது. அனைவரது ஊழல்களையும் தேர்தல் மேடைகள் மூலமே வெளியில் கொண்டுவர முடியும். சட்டம் தெரியாமல் நான் கதைக்கவில்லை.

தமிழர்களை கிழக்கில் கூண்டோடு ஒழிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். இவர்கள் தொடர்பாக தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். அண்மையில் ஒருவர் இராவணன் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் காரைதீவு சந்தியில் உள்ள விபுலானந்தர் சிலைக்கும் தொப்பியைப் போட்டு இவர் எங்களினத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லும் நிலையும் உருவாகலாம். கண்டி இராச்சியத்தினை வெள்ளைக்காரர்கள் பிடிக்க முடியாது இருந்தபோது அங்கு பொருட்களைக் கொண்டு இறக்கியவர்களே இங்குள்ள முஸ்லிம்களாகும்.

கிழக்கு மாகாணத்தின் இருப்பினை தக்கவைப்பதற்கான வழியை முதலில் பார்க்க வேண்டும். ஹிஸ்புல்லாவின் அரபுக் கல்லூரியினை அரசாங்கம் பொறுப்பேற்றிருக்காகவிட்டால் அதனூடாக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.

தற்போதும், உலமாக்கள் சபை ஊடாக அரேபிய நாடுகள் பெருமளவிலான நிதியை வழங்குகின்றன. கிழக்கில் காணிகளை கொள்வனவு செய்வதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா இன்று 800 ஏக்கர் காணியை வாங்கிவைத்துள்ளார். தமிழர்களின் பெயரிலேயே இந்தக் காணிகள் கொள்வனவு செய்யப்படுகின்றன.

இப்போது, திட்டமிட்ட சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கினைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக என்னுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும். கிழக்கில் தமிழர்கள் தங்களது செறிவினை அதிகரிக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளவேண்டும்.

கூட்டமைப்புக்கு என்று வாக்களித்து எதனையும் பெறமுடியாது. தற்போது வீடு இல்லாமல் போயிவிட்டது. ரவூப் ஹக்கீம் வீட்டின் முகட்டினை உடைத்துவிட்டு சென்றுவிட்டார். அமீர்அலி சுவரினை உடைத்துவிட்டுச் சென்றுவிட்டார். ஹாபீஸ் நசீர் அத்திவாரத்தினையே கிளப்பிச் சென்றுவிட்டார். இனி வீட்டைப்பற்றி யாரும் சிந்திக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker