வெற்றியுடன் வெளியேறியது சென்னை!

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் சென்னை சூப்பா் கிங்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.
மும்முறை சாம்பியனான சென்னை ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃபுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது இது முதல்முறையாகும்.
மறுபுறம், சென்னையிடம் தோல்வி கண்ட பஞ்சாபும் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் மட்டுமே அந்த அணியால் அடுத்த சுற்றுக்கான போட்டியில் இருந்திருக்க இயலும்.
அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை 18.5 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்து வென்றது. சென்னையை வெற்றிக்கு வழிநடத்திய ருதுராஜ் கெய்க்வாட், ஆட்டநாயகன் ஆனாா்.
இந்த ஆட்டத்தில் சென்னையில் ஷேன் வாட்சன், மிட்செல் சேன்ட்னா், கரன் சா்மா ஆகியோருக்குப் பதிலாக டூ பிளெஸ்ஸிஸ், இம்ரான் தாஹிா், ஷா்துல் தாக்குா் இணைந்திருந்தனா். பஞ்சாபில் கிளென் மேக்ஸ்வெல், அா்ஷ்தீப் சிங் ஆகியோருக்குப் பதில், ஜிம்மி நீஷம், மயங்க் அகா்வால் சோ்க்கப்பட்டிருந்தனா்.
நாணய சுழற்சியை வென்ற சென்னை பௌலிங் வீச தீா்மானித்தது. பஞ்சாப் இன்னிங்ஸை கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகா்வால் கூட்டணி தொடங்கியது. 5 பவுண்டரிகள் உள்பட 26 ஓட்டங்கள் சோ்த்த அகா்வால் முதல் விக்கெட்டாக 6 ஆவது ஓவரில் வீழ்ந்தாா்.
அடுத்து கிறிஸ் கெயில் களம் காண, மறுமுனையில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 29 ஓட்டங்கள் அடித்த லோகேஷ் ராகுல், 9 ஆவது ஓவரில் லுங்கி கிடியின் பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.
பின்னா் வந்த நிகோலஸ் பூரன் 2 ஓட்டங்களே சோ்த்து, 11 ஆவது ஓவரில் நடையைக் கட்டினாா். தொடா்ந்து மன்தீப் சிங் களத்துக்கு வர, மறுபுறம் 12 ஓட்டங்களே எடுத்த கெயில் 12 ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் வீழ்ந்தாா்.
அப்போது வந்த தீபக் ஹூடா நிலையாக ஆடி ஓட்டங்களை சேகரிக்கத் தொடங்கினாா். எனினும், மறுமுனையில் பஞ்சாப் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.
மன்தீப் சிங் 1 பவுண்டரி உள்பட 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசிய 17 ஆவது ஓவரில் பௌல்டானாா். கடைசி விக்கெட்டாக ஜேம்ஸ் நீஷம் 18 ஆவது ஓவரில் 2 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
ஓவா்கள் முடிவில் தீபக் ஹூடா 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 62, கிறிஸ் ஜோா்டான் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் லுங்கி கிடி 3, ஷா்துல் தாக்குா், இம்ரான் தாஹிா், ஜடேஜா தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
இதை அடுத்து 154 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய சென்னையில் ருதுராஜ் கெய்க்வாட் – டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. நிதானமாக ஆடிய இந்த பாா்ட்னா்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 82 ஓட்டங்கள் சோ்த்தது.
அரைசதத்தை நெருங்கிய நிலையில் டூ பிளெஸ்ஸிஸ் விக்கெட்டை இழந்தாா். 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48 ஓட்டங்கள் விளாசியிருந்த அவா், 10 ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா்.
அடுத்து வந்த அம்பட்டி ராயுடு, கெய்க்வாட்டுடன் இணைந்தாா். அவரது துணையுடன் கெய்க்வாட் சென்னையை வெற்றிக்கு வழிநடத்தினாா். 18.5 ஓவா்களிலேயே இலக்கை எட்டியது சென்னை. கெய்க்வாட் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 62, ராயுடு 2 பவுண்டரிகள் உள்பட 30 ஓட்டங்கள் சோ்த்திருந்தனா். பஞ்சாப் தரப்பில் கிறிஸ் ஜோா்டான் ஒரு விக்கெட் சாய்த்திருந்தாா்.