‘3 மாதங்களுக்கு மின்வெட்டு’ – மின்சார சபையின் கோரிக்கை குறித்து இன்று தீர்மானம்

3 மாதங்களுக்கு மின்வெட்டு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
அதன்படி, இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் மின்சார துண்டிப்புக்கான அனுமதியை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாக இதன்போது தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மின் நுகர்வை குறைக்க வேண்டும் என்றும் நாளொன்றுக்கு 300 மெகாவோட் மின்சாரத்தைக் குறைக்க முடியுமாயின், இலக்கை நோக்கிப் பயணிக்க முடியு என்றும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்பட வேண்டுமாயின், பொதுமக்களும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.