தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய கும்பாபிசேகத்தை முன்னிட்டதான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

வி.சுகிர்தகுமார்
கறை கழைந்து குறைபோக்கி நிறைவாக்கி எம்மவர்க்கு கலைவளமும், திருவருளும், எழில் வளமும் இனிதே வளங்கும் பழம்பெரும் பதியர்ம் கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டபஷ அஷ்டபந்தன நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிசேகத்தை முன்னிட்டதான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று ஆரம்பமானது.
முனிவர்களாலும் தேவர்களாலும் ஆசீர்வதிக்கப் பெற்று சித்தர்களாலும் சமய குரவர்களாலும் போற்றப்பட்டு பல தத்துவஞானிகளையும் அறிஞர்களையும் ஈர்த்த இந்துமா சமுத்திரத்தின் முத்தெனத்திகழும் இயற்கை அன்னை அரவணைப்பில் இலங்கை மணித்திருநாட்டின் கிழக்கு மாகாணத்தில் தம்பிலுவில் பகுதி விஸ்வப்பிரம்ம குலத்தோர் செறிந்துவாழும் முனையூர் பதியில் அமர்ந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் ஸ்வஸ்த்திஸ்ரீ சார்வரி வருடந்தன்னில் வரும் பங்குனித்திங்கள் 05ஆம் நாள் (18.03.2021) முற்பகல் 10 மணிமுதல் 11 மணிவரையுள்ள சுபநேரத்தில் கும்பாபிசேகம் நிகழவுள்ளது.
இதனை முன்னிட்டதாக (14) கருமாரம்ப கிரியைகளோடு ஆரம்பமான கும்பாபிசே நிகழ்வுகள் 15 ஆம் திகதி இடம்பெற்ற வழிபாடுகள் மற்றும் 16 ஆம் 17ஆம் திகதிகளில் இடம்பெறும் எண்ணெய்க்காப்பு சாத்துதல் 18 ஆம் திகதி இடம்பெறும் கும்பாபிசேக குடமுழுக்கு தொடர்ந்து 48 நாள் நடைபெறும் மண்டலாபிசேக பூஜைகளுடனும் சங்காபிசேக கிரியைகளுடனும் நிறைவுறும்;.
ஆலய தலைவர் க.சசிகாந்தன் தலைமையில் ஆலய நிருவாகத்தின் மற்றும் குடிபூசை முகாமைக்காரர்கள் கும்பாபிசேக குழுவினர் மகளிர் அமைப்பினர் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலோடு இடம்பெறும் கும்பாபிசே கிரியைகள் யாவற்றையும் மாதா பிதா விஸ்வபிரம்மகுரு அவர்களினதும் வேலூர் இந்தியாவை சேர்ந்த விஸ்வபிரம்மஸ்ரீ ஜோதி முருகாச்சாரியார் அவர்களது அருளாசிகளுடன் சர்வபோதகம் உபன்னியாசமணி கதா கலாட்சேப திலகம் கலாபூசணம் கலாசூர முத்தமிழரசு சிவயோகச்செல்வன் த.சாம்பசிவம் குருக்கள் தலைமையிலான குருமார்கள் நடாத்தி வைக்கவுள்ளனர்.
கும்பாபிசேக கிரியைகள் யாவற்றிலும் பக்தர்கள் ஆசார சீலர்களாக கலந்து கொண்டு அம்மன் அருள்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.