
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 ஆசியக் கிண்ணத் தொடரின் நேற்றைய (14) போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பெற்றது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 08.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டம் மேற்கொள்ள தீர்மானித்த பாகிஸ்தானால், குல்தீப் யாதவ் (3/18) மற்றும் அக்சர் படேல் (2/18) தலைமையிலான இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
2009 உலக சாம்பியன்களனா பாகிஸ்தான் நேற்றைய ஆட்டத்தில் 120 பந்துகளில் 63 டாட் பந்துகளை விளையாடினர்.
அதாவது 10 ஓவர்களுக்கு மேல் ஓட்டம் எதுவும் எடுக்காமல்- இந்தியாவின் சுழல் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுகளில் அழுத்தத்திற்கு உள்ளாகினர்.
சாஹிப்சாதா ஃபர்ஹான் 40 (44) ஓட்டங்கள் எடுத்த போதிலும், பாகிஸ்தானின் இன்னிங்ஸ் ஒருபோதும் வேகத்தை எட்டவில்லை.
13 ஆவது ஓவரில் குல்தீப் இரட்டை விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த சரிவு பாகிஸ்தானை 90/7 என்ற நிலையில் தடுமாற வைத்தது.
ஷாஹீன் அப்ரிடி (16 பந்துகளில் 33) கடைசி இரண்டு ஓவர்களில் 28 ஓட்டங்களை சேர்த்ததுடன், பாகிஸ்தானுக்கு மிகவும் தேவையான உந்துதலை அளித்தார்.
ஆனால் ஒட்டுமொத்த எண்ணிக்கை எப்போதும் குறைவாகவே இருந்தது.
பின்னர், இந்தியா இலக்கை நோக்கி துரத்தத் தொடங்கியது.
ஷாஹீன் அப்ரிடியின் முதல் ஓவர் முதலிருந்து பந்துகளிலேயே அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விளாசி அதிரடியுடன் இந்தியாவின் இன்னிங்ஸை ஆரம்பித்தார்.
எனினும், பின்னர் ஷுப்மன் கில் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதையடுத்து அபிஷேக் சர்மா 13 பநதுகளில் அதிரடியுடன் 31 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா நிதானமாக விளையாடி 31 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.
இறுதியில் இந்திய அணி 15.5 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் 47 ஓட்டங்களுடனும், சிவம் துபே 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் குழு A புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் தெரிவானார்.
பலர் கணித்தது போல இது ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாக இருந்தது.
நாணய சுழற்சியில் கைகுலுக்கல்கள் இல்லாமல் தொடங்கிய ஆட்டம் முடிந்தவுடனும் கைலுக்கள் இல்லாமல் நிறைவுக்கு வந்தது.