2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதா? சாட்சியங்களை கோரும் மஹேல!!

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன பதிலளித்துள்ளார்.

போட்டிக் காட்டிக்கொடுக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுமாறு கூறியுள்ள மஹேல ஜயவர்தன, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விடயம் தேர்தல் சர்க்கஸ் எனவும் கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பணத்திற்காக காட்டிக் கொடுக்கப்பட்டதாகவும் இதனை தான் பொறுப்புடன் கூறுவதாகவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டிருந்தார்.
இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்க முடியும் எனவும், சிலர் பணத்திற்காக இந்த போட்டியை காட்டிக்கொடுத்தனர் என தான் உணர்வதாகவும் மகிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
				 
					


