இனிமேல் ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து மாற்று வீரர்கள்: கால்பந்து போட்டியில் புதிய மாற்றம்!

கொரோனா வைரஸ் தொற்று முடக்கத்தால், பெரும்பாலான கால்பந்து சங்கங்கள், கால்பந்து போட்டிகளை நடத்துவதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன், வருவாய் இல்லாமல் நிதி பற்றாக்குறையை சந்தித்துள்ள கால்பந்து சங்கங்கள், வீரர்களுக்கு ஊதியம் கொடுக்க திணறி வருகின்றது.
இதனால் பல்வேறு திட்டங்களுடன் உள்ள கால்பந்து சங்கங்கள், கால்பந்து போட்டிகளை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது.
இந்தநிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
முடக்கநிலை முடிவடைந்தோ அல்லது நெருக்கடியான நேரங்களில் கால்பந்து போட்டிகளை மீண்டும் நடத்தினால், அடுத்தடுத்து போட்டிகள் நடைபெறும் சூழல் உருவாகும். ஆகையால் வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும்.
இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மாற்று வீரர்கள் விதியில் தற்காலிக மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, இனிமேல் ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து மாற்று வீரர்களுக்கு அனுமதி தரப்படும். இந்த மாற்றங்கள் 2020-2021 சீசன் முழுவதும் இந்த விதி அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.