150 அடி பள்ளத்தில் வீழ்ந்தது அம்பியூலன்ஸ் வண்டி – இருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்ட நானுஓயா பங்களாஅத்த பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும் உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் டயகம பிரதேச வைத்தியசாலையில் இருந்து நோயாளி ஒருவரை நுவரெலியா வைத்தியசாலையில் இறக்கி விட்டு மீண்டும் டயகம வைத்தியசாலையை நோக்கி பயணித்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அம்பியூலன்ஸ் வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும் உதவியாளரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நானுஓயா பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து பாரந்தூக்கி இயந்திர உதவியின் மூலம், விபத்துக்குள்ளான அம்பியூலன்ஸ் வண்டியை பாதைக்கு கொண்டுவந்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.