இலங்கை
நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானம் – கருணா அம்மான்!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
கல்முனை உப பிரதேச செயலக முன்றலில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திறமைமிக்க புத்திஜீவிகள் இளைஞர்களை இணைத்துக்கொண்டு தனித்துவமாக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியானது அழிந்துபோகின்ற ஒரு கட்சியாகத்தான் காணப்படுகின்றது என்றும் விமர்சித்த அவர், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் என்ற விடயத்தில் நற்செய்தியொன்று கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து இதை உடனே தரம் உயர்த்தி தரவேண்டும் என்று அழுத்தமாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.
அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக 6ஆம் திகதி நாடாளுமன்ற குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதென்றும் இதற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.