ஜமால் கஷோகி கொலை வழக்கு – சவுதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புபட்ட 11 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜமால் கஷோகி கொலையில் நேரடியாகத் தொடர்புடைய ஐந்து பேருக்கே இன்று (திங்கட்கிழமை) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 3 பேருக்கு சிறைத் தண்டனையும் விதித்தது. நான்கு பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார்.
அங்கு வெளியாகும் வொஷிங்டன் போஸ்ற் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த ஒக்ரோபர் மாதம் அவர் சென்ற நிலையில் கொல்லப்பட்டிருந்தார்.
ஆனால், தூதரகத்துக்குள் அவர் கொல்லப்பட்டதாக சவுதி அரேபியா 18 நாட்களுக்குப் பின்னர் ஒப்புக் கொண்டது. இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்து வந்த சவுதி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.