இலங்கை

கொரோனாவுக்கு இனவாதமோ பிரதேசவாதமோ தெரியாது : மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்…

நூருல் ஹுதா உமர்

கொரோனா வைரசுக்கு இனம், மதம், குலம், பிரதேசம் என்ற எந்த பாகுபாடும் தெரியாது. சுகாதார வழிமுறைகளை பேணாத யாராக இருந்தாலும் அது தாக்கும். இதனாலையே தான் நாட்டில் எவ்வித பாரபட்சமுமின்றி பயணத்தடை அமுலாக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் எவ்வித மரண பயமுமின்றி அன்றாடம் வாழ்வது போன்றே இன்றைய நாட்களிலும் வாழ்வது எம் எல்லோருக்கும் ஆபத்தை உண்டாக்கும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

இன்று (14) மாலை கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், கல்முனை மாநகரத்தின் பெரியநீலாவணை தொடக்கம் மாளிகைக்காடு ஆரம்ப எல்லை வரை மறுபக்கம் சவளக்கடை ஆரம்ப எல்லை வரை மக்கள் வழமை போன்று தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதனால் நீண்டகால நோயாளிகள், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வருவோர் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். போதாக்குறைக்கு திருமண வைபகங்கள், பிறந்தநாள் நிகழ்வுகள், மரண வீடுகளில் கூட நூற்றுக்கணக்கானோர் கூடுவது இப்போதை சூழ்நிலையில் ஆபத்தானதாக அமைந்துள்ளது.

சுகாதார துறையினரும், பாதுகாப்பு படையினரும் தமது குடும்பங்களை மறந்து விடுமுறைகள் கூட இல்லாமல் கடுமையாக இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கல்முனை மக்கள் சார்பில் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக மக்கள் தங்களின் ஒத்துழைப்புக்களை வழங்காது செயற்பட்டு வருவது கவலையளிக்கிறது. முக்கிய தேவைகளுக்காக வழங்கப்பட்ட அனுமதிகளையும் சிலர் முறைகேடாக பயன்படுத்துவது கவலையான விடயமாகும். நாட்டில் வேகமாக பரவும் இந்த கொரோனா மூன்றாம் அலை கல்முனை பிராந்தியத்தில் தன்னுடைய வேகத்தை சமீபத்தைய நாட்களில் கூட்ட ஆரம்பித்துள்ளது தெளிவாகிறது.

உயிராபத்து நிறைந்த இந்த காலகட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி எல்லோரும் வீட்டில் அமைதியாக இருந்து இறைவனை பிரார்த்திக்க வேண்டும். அப்படியில்லாது சுகாதார விதிமுறைகளை மீறி நடப்போருக்கு கடுமையான முறையில் சட்டநடவடிக்கை எடுக்க சுகாதார துறையினரும், பாதுகாப்பு தரப்பினரும் முன்வரவேண்டும். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அரசியல் தலையீடுகளோ அல்லது அதிகார அழுத்தங்களோ இல்லாது சுதந்திரமாக கடமையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker