உலகம்

வெளிநாட்டவர்களை வெளியேற்ற தயார் சைனா அதிரடி அறிவிப்பு!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
சைனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வைகான் நகரிலிருந்து கடந்த மாத இறுதியில் பிறப்பெடுத்த கொரோனா வைரஸ் தற்போது சைனா முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. சைனாவின் 31 மாகாண மட்ட பிராந்தியங்களில் இந்த கொடிய வைரஸின் பிடியில் சிக்கியுள்ளன.
இந்த வைரஸ் தாக்கியவர்கள் ஒருவித நிமோனியா காய்ச்சலுக்குள்ளாகி உயிரிழப்பை சந்திக்கின்றனர். இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டு சைனா அரசாங்கத்தையும், வைத்தியத்துறையையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இத்தகைய கடும் வீரியம் நிறைந்த வைரஸூக்கு உயிரிழந்தவரின் எண்ணிக்கை  170 ஆக உயர்ந்தது. இதில் ஹுபெய் மாகாணத்தில் மட்டும் 125 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 3,554 பேருக்கு இந்த வைரஸ் தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இதைப்போல சைனா முழுவதும் 5,974 பேர் இந்த வைரஸின் பிடியில் சிக்கியுள்ளனர்.
அதி தீவிர சிகிச்சையில் இருக்கும்  1,239 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. அங்கு இது ஒருபுறமிருக்க அங்கு மேலும் 9,239 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் தென்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதல் விரைவில் உச்சக்கட்டத்தை எட்டும் எனவும், அப்போது உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் இந்த நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள சைனாவின் வைத்திய நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வைத்திய நிபுணர் குழுவின் தலைவர் ஜோங் நன்ஷான் கூறுகையில்:-
‘கொரோனா வைரஸின் தாக்கம் எப்போது உச்சத்தை அடையும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். எனினும் ஒரு கிழமை அல்லது 10 நாட்களில் இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் கடும் உச்சக்கட்டத்தை எட்டும் என நினைக்கிறேன். பின்னர் அதிகளவில் நோய் பரவும்’ என்றார்.
இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு 3 அல்லது 4 மாதம் வரை ஆகுமென்றும், வைரஸை அழிப்பதற்கான மருந்துகளை உருவாக்கவும் சில காலம் பிடிக்கும் என தெரிவித்தார்.
சைனாவில் ஜெட் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு வெளிநாட்டிலும் தொடங்க ஆரம்பித்திருக்கிறது. அந்தவகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் நேற்று அறிவித்தது.
மேலும் மலேசியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருப்பதாக மலேசியா அரசாங்கம் கூறியுள்ளது. இதைப்போல கனடாவில் 3 பேர் கொரோனா பாதிப்புடன் இருப்பதாக அந்த கனடா அரசாங்கம் குறிப்பிட்டிருக்கிறது.
இதற்கிடையே சைனாவில் வசித்து வரும் வெளிநாட்டவரை மீட்கும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் ஆரம்பித்துள்ளன. அதன்படி சைனாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த 206 ஜப்பானியரை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் நேற்று டோக்கியோ போய் சேர்ந்தது.
இவ்வாறு தங்கள் நாட்டு பிரஜைகளை மீட்கும் நடவடிக்கைகயை விரும்பும் நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார் என சைனா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சைனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது:-
‘வுகான் மற்றும் ஹுபெய் மாகாணத்தில் வசித்து வரும் அனைத்து வேறு நாட்டு குடிமக்களின் உயிரையும், நலத்தையும் பாதுகாப்பதற்கு சைனா முக்கியத்துவம் அளிக்கிறது. அங்கிருந்து வேறு நாட்டு பிரஜைகளை வெளியேறுமாறு எந்த நாடு கேட்டுக்கொண்டாலும் சர்வதேச விதிப்படி அதற்கான உதவியை சைனா வழங்கும்’ என அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் குறையும் வரை சைனாவுக்கு விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சைனாவுக்கு சர்வதேச நிபுணர் குழுவொன்றை உலக சுகாதார அமைப்பு அனுப்பி வைத்துள்ளது. சைனாவிலும், உலகளவிலும் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதே தங்களின் உயர்ந்தபட்ச நோக்கம் ஆகும் என உலக சுகாதார  அமைப்பின் தலைவர் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker