ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் தொற்று 03 ஆவது மரணம் இன்று: ஒரே மாதத்தில் இரண்டு மரணம் பதிவானது….

-கிரிசாந் மகாதேவன்-
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் காரணமாக 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில். இன்றைய தினம் (27) காலை 07.40 மணியளவில் ஆலையடிவேம்பு நாவற்காடு பிரதேசத்தில் கொவிட்-19 காரணமாக மரணம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆலைலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி எஸ் அகிலன் குறிப்பிட்டார்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக இது மூன்றாவது மரணம் என்பதுடன். முதலாவது மரணம் நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 இரண்டாம் அலையின் போது ஏற்பட்டது.
மேலும் இரண்டாவது மரணம் கொவிட்-19 மூன்றாம் அலையின் போது ஏற்பட்டது என்பதுடன் ஒரே மாதத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்கள் நிலைமை உணர்ந்து பொறுப்புடன் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுகின்றார் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ் அகிலன் அவர்கள்.
மேலும் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் வெளி பிரதேசங்களுக்கு சென்று வந்தவர்களாக காணப்படுவதால் பிரதேச மக்கள் தேவை இன்றி வெளிப்பிரதேசங்களுக்கு சென்று வருவதனை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் பிரதேச ஆலய நிர்வாகத்தினரும் ஆலயத்தில் பக்தர்கள் நடமாட்டத்தை முடிந்தவரை தற்போதைய நிலை அறிந்து கட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டதுடன் கர்ப்பிணி தாய்மார்களும் கூடிய கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.