கல்முனை நகரத்தை விற்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் – ஹென்றி மகேந்திரன்

கல்முனை மாநகர சபை தமிழ் உறுப்பினர்கள் சிலர் கல்முனை நகரத்தை விற்று விட ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் தமிழ் மக்களுக்கு பாதகமான தீர்வு எட்டப்படுமானால் அதனை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் கூறினார்.
கல்முனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இன்று கல்முனையிலிருந்து மக்களுக்கு எதுவுமே தெரிவிக்காமல் கொழும்புக்குச் சென்ற கல்முனை மாநகர சபை தமிழ் உறுப்பினர்கள் சிலர் கல்முனை நகரத்தை விற்று விட ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எல்லைகள் தொடர்பான தீர்வுக்கான வரைபை இதுவரை மக்கள் அறியவில்லை. எவருக்கும் தெரியாது. அப்படியெனின் கொழும்பிலிருக்கும் ஒரு சிலருக்காக இந்தத் தீர்வு?
நாடாளுமன்ற உறுப்பினரும் சில மாநகர சபை உறுப்பினர்களும் தமது எஜமான் என நினைக்கின்ற ஒருவருக்காக எமது பூர்வீக நகரத்தை விட்டுக் கொடுக்க முனைவது ஒருபோதும் ஏற்கமுடியாது” என்றார்.