இலங்கைக்கு பொருத்தமான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள உடனடி நடவடிக்கை

கொவிட் தொற்றிலிருந்து இலங்கை மக்களை மீட்டெடுப்பதற்கு பொருத்தமான தடுப்பூசியை அடையாளம் காண்பதில் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பாக தெரிவிக்கையில், தடுப்பூசி தொடர்பான ஆய்வறிக்கை உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியுள்ளது.
தடுப்பூசியை பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவு, தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்கான வெப்பநிலை தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இவை தொடர்பிலான விடயங்களை அங்கீகரிக்கப்பட்ட மருந்தக ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் மூலம் பெறப்பட்ட அங்கீகாரம் உள்ளிட்ட விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்பொழுது வெளிவந்துள்ள தடுப்பூசிகள் பொரும்பாலானவற்றுக்கு இந்த விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட பிரதிநிதி என்ற வகையில் லலித் வீரதுங்க பல்வேறு நாடுகளுடன் ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.
கொவிட் தடுப்பூசி தொடர்பாக ழுழுமையாக மதிப்பீடுகளை மேற்கொண்டு இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் இருப்பதாக தெரிவித்த அவர், இலங்கையில் தேசிய நோய் எதிர்ப்பு சக்தி கொள்கைக்கு உட்பட்ட வகையில் உரிய தடுப்பூசியை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான தொற்று நோய்க்கான ஆலோசனைக் குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்குவதை இலக்காக கொண்ட குழு தடுப்பூசி வழங்கப்படும் இடம், களஞ்சியப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பாகவும் இதனுடன் தொடர்புப்பட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் Vaccine Deployment என்ற திட்டத்திற்கு அமைவான ஆலோசனை குழு இதற்கான வரைவுகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், தடுப்பூசி கிடைக்கப்பெற்ற பின்னர் அதனை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பிலுள்ள சட்ட விதிகள் தொடர்பிலும் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடக்கம் உலக சுகாதார அமைப்புடன் உடன்படிக்கை மேற்கொண்டதாவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சினால் கொவக்ஸ் (Covax) வசதிகளுக்கான வெற்றிகரமான கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக ஜெனிவாவிலுள்ள தடுப்பூசி அமைப்புகளான Global Alliance for Vaccines and Immunizations என்ற அமைப்பிடம் 2020.07.20 ஆம் திகதி கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டதாவும் இதற்கமைவாக கொவக்ஸ் வசதிகளை வழங்குவதற்கு உறுதிமொழி தெரிவிக்கபட்டுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைவாக கொவக்ஸ் வேலைத்திட்டதின் கீழ் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு உடன்படிக்கை செய்து கொண்ட நாடு இலங்கையாகும். மக்கள் தொகையில் 20% பேருக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.