வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக ஜனாதிபதி கூறியமை மகிழ்ச்சியளிக்கிறது-துரைரெட்னம்

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாளத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமென கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கசப்புணர்வுகளும் தமிழ் மக்களின் கோரிக்கை தொடர்பாக தாங்கள் வெளிக்காட்டிய கருத்துக்கள் தொடர்பாகவும் இத்தோடு ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களின் வாக்குகளை நம்பியே செயற்பட்டதன் காரணமாகவும் தமிழ் மக்கள் தங்களுடைய நிலைப்பாட்டை வாக்களிப்பின் ஊடாக வெளிக்காட்டியுள்ளனர்.
எம்மக்களைப் பொறுத்தவரையில் அனைத்தின மக்களுடனும் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் ஐக்கியப்பட்டு வாழவே விரும்புகின்றனர்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பது அந்நாட்டில் வாழுகின்ற பல்லினமதம், கட்சி பாராது அனைத்து மக்களையும் சமமாக வழிநடத்துவதே ஆகும். தாங்கள் பதவிப் பிரமாணம் செய்யும்போது வட. கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாளத் தயாராக இருப்பதாக தெரிவித்தது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
எனவே எதிர்வரும் காலங்களில் வட. கிழக்கு மக்களின் ஆணையை ஏற்றுக்கொண்டு அம்மக்களை வென்றெடுப்பதற்கான நல்ல எண்ண செயற்திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.