நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற யோசனைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தொடர்பாக நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது.
இது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத செயற்பாடாகும். கடந்த கால் நூறாண்டுகாலமாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையையே கண்டுவருகின்றோம்.
எவ்வாறாயினும் கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஆதரவை வழங்கும்” என பதிவிட்டுள்ளார்.