சுவாரசியம்

ரத்தம் குடித்து வெறியை தணித்த நாடோடி ராஜாக்கள்!

சிதியர்கள், இப்போது தெற்கு சைபீரியா என்றழைக்கப்படும் பகுதியில் வாழ்ந்த நாடோடி பழங்குடியினர். இவர்களின் கலாசாரம் கி.மு 900 முதல் கி.மு 200 வரையிலான காலகட்டத்தில் பரவலாக காணப்பட்டது.

கட்டுமஸ்தான உடல்வாகு, வலிமை, போர்க்குணம், வீரம் நிரம்பிய ஒரு நாடோடி குழுவாக வாழ்ந்து சென்ற இடங்களை எல்லாம் கைப்பற்றிய அசாத்திய ஆக்கிரமிப்பாளர்களாக இந்த பழங்குடியினரை வரலாற்றாய்வார்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.

மத்திய ஆசியாவில் பரவலாகவும் சீனா முதல் வடக்கு கருங்கடல் பகுதிவரை இவர்களின் ஆக்கிரமிப்புச் சுவடுகளை வரலாற்றாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சிதியர்களின் எலும்புக்கூடு மிச்சங்கள், உடல்களை பதப்படுத்தி மம்மி ஆக பராமரித்த அவர்களின் வேலைப்பாடுகள், அவர்கள் வாழும் காலத்தில் விட்டுச் சென்ற ஆயுதங்கள் போன்றவை வெளி உலகுக்குத் தெரியும் வரை, சிதியர்கள் பற்றி அதிகம் யாரும் கேள்விப்பட்டிருக்கவில்லை.

1700 களில் வரலாற்றுபூர்வ குறிப்புகள் கிடைக்கும்வரை சிதியர்கள் பற்றி நாம் அறிந்ததெல்லாம் சில வரலாற்றாய்வாளர்கள் விட்டுச் சென்ற குறிப்புகள் மட்டுமே. அவற்றை கோர்வையாக சேர்த்து, எழுதித் தொகுத்ததன் அடிப்படையிலேயே அவர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என வரலாற்றாய்வாளர்கள் அனுமானிக்கிறார்கள்.

இந்த குறிப்புகளில் முக்கியமானது கிரேக்க வரலாற்றாய்வாளர் ஹெரோடோட்டஸ் எழுதிய “வரலாறுகள் – கி.பி 5ஆம் நூற்றாண்டு” என்ற புத்தகம்.

“சிதியர்களின் கண்ணில் படும் எதிரிகள் எவரும் அவர்களிடம் இருந்து தப்பியதில்லை. அதேபோல, அவர்கள் விரும்பினால் மட்டுமே எதிரிகளின் பார்வையில் தோன்றுவர்,” என்று அந்த புத்தகத்தில் ஹெரோடோட்டஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

கி.மு 7ஆம் நூற்றாண்டில் அசிரிய கல்வெட்டுகளில் இடம்பெற்ற குறிப்பின்படி இந்த சிதியர்கள், தங்களுடைய ஆக்கிரமிப்பு எல்லையை விரிவுபடுத்தும் நோக்குடன் அசிரிய பேரரசுக்குள்ளும் புகுந்தனர். அப்போது போரில் தங்களுடைய வீழ்ச்சியை ஏற்றுக் கொண்ட அசிரிய மன்னர்கள், அவர்களுடன் சமாதானம் செய்து கொள்வதற்கு அடையாளமாக தங்கள் நாட்டு இளவரசியை சிதிய மன்னருக்கு மணம் முடித்து வைத்ததாக கதை உள்ளது.

கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, பண்டைய சிதியர்கள் கருங்கடலுக்கும் – காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காக்கேசியா பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என அறியப்படுகிறது. பிற சிதியர்களின் இனக்குழுவினரை மத்திய ஆசியாவைச் சேர்ந்த சகர்கள் என அசிரியப் பேரரசும் ஹான் சீனர்களும் குறித்துள்ளனர்.

சிதியர்கள் குதிரை வளர்ப்புக் கலையில் வல்லவர்கள். போர்களில் குதிரைகளை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள். கி மு எட்டாம் நூற்றாண்டில் கிழக்கு சீனாவின் ஜொவ் அரச குலத்தினர் மீது படையெடுத்தனர்.

பின்னர் மேற்கில் போண்டிக் புல்வெளியின் சிம்மேரியர்கள் மீது படையெடுத்து போண்டிக் ஸ்டெப்பி புல்வெளி நிலங்களைக் கைப்பற்றினர். சிதியர்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போது யுரேசியாவின் மொத்தப் புல்வெளி நிலங்களின் மீது அதிகாரம் செலுத்தினார்கள்.

ஐரோப்பாவின் மேற்கில் உள்ள கார்பதிய மலைகள் முதல், கிழக்கில் சீனா, வடகிழக்கில் சைபீரியா வரையிலும் பரவியிருந்தனர். சிதியர்களின் ஆதிக்கத்தில் இருந்த இப்பகுதிகளை மத்திய ஆசியாவின் முதல் நாடோடிப் பேரரசு என வரலாற்றாய்வாளர்கள் அழைத்தனர்.

தற்கால யுக்ரேன், தெற்கு ஐரோப்பாவின் கிரைமியா போன்ற பகுதிகளை ஆண்ட மேற்கு சிதியர்கள் நாகரிகத்தில் மேம்பட்டு விளங்கினர். பட்டுப் பாதையை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர்.

கி.மு ஏழாம் நூற்றாண்டில் காக்கேசியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் அடிக்கடி படையெடுத்தன் வாயிலாக அப்பகுதிகளில் அரசியல், சமயம் போன்றவற்றில் முக்கிய பங்களித்தனர். கி பி 630 – 650-களில் சிதியர்கள் மேற்கு பாரசீக மேட்டு நிலங்களை கைப்பற்றினர்.

சிதியர்கள் கி மு 612-இல் அசிரியாவை கைப்பற்றி அழித்தனர். அதைத் தொடர்ந்து அகாமனிசியப் பேரரசை வெற்றி கொண்டனர். ஆனால் கி.மு நான்காம் நூற்றாண்டில் மேற்கு சிதியர்கள் மசடோனியா பேரரசால் பலத்த சேதம் அடைந்தனர். இருப்பினும் மத்திய ஆசியாவின் பாரசீக சர்மதியர்களை (Sarmatians) வென்றனர்.

கி மு இரண்டாம் நூற்றாண்டில் சகர்கள் என அழைக்கப்படும் கிழக்கு சிதியர்கள், ஆசிய புல்வெளி நிலங்கள் மீது படையெடுத்து தெற்காசியாவின் தற்கால ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியாவின் சில பகுதிகளில் குடியேறினர்.

தெற்காசியாவில் குடிபெயர்ந்த கிழக்கு சிதியர்கள், சகர்கள் அல்லது இந்தோ-சிதியர்கள் என அழைக்கப்பட்டனர். சீனாவின் ஆன் அரசமரபு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காலத்தில், சகர்கள் எனும் இந்தோ-சிதியர்களின் ஒரு கூட்டம் பாமிர் மலைகளைக் கடந்து சீனாவின் மேற்கு பகுதிகளை கைப்பற்றி அங்கு சில காலம் வாழ்ந்தது.

மத்திய ஆசியாவின் கிழக்கு சிதியர்கள் பஷ்தூ மொழி மற்றும் பாமிரி மொழிகளையும், சகர்களின் மொழிகளையும் பேசினர். பார்சி மொழி போன்ற கிழக்கு இரானிய மொழிகளையும் சிலர் பேசினர்.

மேற்கில் சிதியர்கள் சிதியோ-சர்மதியன் மொழிகளையும்; வரலாற்றின் மத்திய காலத்தில் மேற்கு சிலாவிய மொழிகள் மற்றும் துருக்கி மொழியையும் சிதியர்கள் பேசினர்.

சிதியர்கள் நாடோடிகள் என்பதால் அவர்களுக்கு நிரந்தரமாக இடமில்லை. எங்கெல்லாம் படையெடுக்கிறார்களோ அங்கு தங்களுடைய அடையாளங்களை அவர்கள் விட்டுச் சென்றனர். அன்னிய இளவரசிகளை துணைவியாக்கிக் கொண்டதால் அந்த பகுதிகளின் போர் உத்திகளை இவர்கள் அறி ந்துதங்களுடைய திறன்களை சுயமாக மேம்படுத்திக் கொண்டனர்.

பின்னர் அன்னிய போர் கருவிகளை மேம்படுத்தி, மேய்ச்சலுக்காக இந்த நாடோடிகள் பயன்படுத்திய குதிரைகள் மீதிருந்தபடி போர் புரியும் திறனை இவர்கள் வளர்த்துக் கொண்டனர். அதில் முக்கியமானது, வழக்கமாக போருக்கு பயன்படுத்தும் மர ஈட்டி அம்பை மூன்று கட்ட கூர்மை வாய்ந்ததாக அம்பாக செழுமைப்படுத்தினர். போர் களத்தில் வேகமாகவும் கூர்மையாகவும் எதிரியை தாக்கும் வகையில் அந்த அம்புகள் இவர்களுக்கு உதவின.

பைசாண்டைன் எழுத்தாளர் ஒருவர், கி.பி 6ஆம் நூற்றாண்டின் கடைசியில் இந்த சிதியர்கள் வெகு சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான அம்புகளை எய்யும் போர் கருவியை தயாரித்திருந்ததாகக் கூறியுள்ளார்.

எதிரியின் இலக்கை முற்றிலுமாக அழிப்பது சிதியர்களின் பாணி என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

சிதியர்களின் வரலாற்றுக் குறிப்புகளை ஆய்வு செய்த வேறு சிலர், தங்களுடைய அம்பில் விஷத்தை தடவி சிதியர்கள் எதிரிகளை மடியச் செய்ததாக கூறியுள்ளனர்.

குதிரைகளின்றி யுத்த களத்தில் தரைப்படையாக போரிடும்போது, நீண்ட மற்றும் சற்று குறுகலான கூர்மையான கோடாரி இவர்களின் விருப்ப ஆயுதமாக இருந்துள்ளது.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் அரசு அருங்காட்சியகத்தில் இந்த ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய ஐரோப்பா, ரஷ்ய பகுதிகளில் நடந்த அகழ்வுப்பணிகளின்போது கிடைத்த பல சிதியர்கள் என நம்பப்படுவோரின் உடல் எச்சங்களின் தலைப்பகுதியில் கோடாரியால் கபாலம் தாக்கப்பட்ட அடையாளங்கள் உள்ளன. அவை சிதியர்களின் தனித்துவமான போர் தாக்குதல் உத்தியாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதை வைத்தே தாக்கும் நடவடிக்கையில் எத்தனை கொடூரமானவர்களாக சிதியர்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.

பழங்கால கிரேக்கத்தில் வரலாற்றுக் குறிப்புகளில் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் எழுதி வந்தவர்கள், “சிதியர்கள்…. வீடுகளின்றி சுமை தூக்கும் வேகன்களில் வாழ்ந்து வந்தனர். அவை வடிவில் சிறியதாகவும் நான்கு சக்கரங்களைக் கொண்டதாகவும் இருந்தன. மற்ற வாகனங்கள் ஆறு சக்கர வாகனங்களாகவும் ஒரு சிறிய வீடு போன்ற தோற்றத்தையும் கொண்டதாக இருந்தன. மழையோ, பலத்த காற்றோ – எதையும் இந்த வாகனங்கள் எதிர்கொள்ளக்கூடியவையாக இருந்தன. பெண்களும் சிறார்களும் இந்த வேகன்களில் வாழ்ந்தார்கள். ஆனால், இந்த பழங்குடியின நாடோடி இன ஆண்கள் எப்போதும் குதிரைகளுடனேயே வசித்து வந்தனர். அந்த அளவுக்கு அவர்கள் குடும்ப உறவுகளை விட குதிரைகளை நேசித்தனர்,” என்று குறிப்பிடுகின்றனர்.

அடிப்படையிலேயே நாடோடிகளாக அறியப்பட்ட இவர்கள், எழுத்துமுறையை தங்களுடைய வாழ்காலத்தில் கொண்டிருக்கவில்லை. அதனால், இவர்களின் கலாசாரமும் நாகரிகமும் வரலாற்றைக் கடந்து வாழவில்லை.

எனினும், இவர்களின் வாழ்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை மம்மிகள் போல பதப்படுத்திப் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் பாறை ஓவியங்கள், பிற்காலத்தில் ஹெரோடோட்டஸ் போன்ற பழங்கால எழுத்தாளர்கள் சிதியர்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்த தகவல்கள் உருவகப்படுத்தப்பட்டவை அல்ல, அவை நிஜத்தின் அடையாளங்கள் என பலராலும் நம்பப்படுகின்றன.

இவர்கள் புதைத்த மனித உடல்களுடன் எடை குறைவான சில பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் குடிநீர் குவளைகள், மரப்பாத்திரங்கள், செம்மறி ஆட்டின் தோல், தரைவிரிப்பான்கள் பிரதானமாக இடம்பிடித்திருந்தன.

இதேபோல, போரில் மடிந்தவர்கள் புதைக்கப்பட்ட இடங்களில், அவர்களின் விருப்ப குதிரையும் உடன் புதைக்கப்பட்டிருந்தன. அந்த குதிரைகள் பெரும்பாலும் மண்டை நடுவே ஈட்டியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவே அறிய முடிகிறது. இது ஒருவித போர் தந்திர உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.

ஹெரோடெட்டஸ் தமது வரலாறுகள் நான்காம் புத்தகத்தில், “நகரங்களையோ கோட்டைகளையோ சிதியர்கள் உருவாக்கியிருக்கவில்லை. ஆனால், இந்த சிதியர்கள் ஒவ்வொருவரும் தேர்ந்த குதிரையேற்ற வில்வித்தை வீரர்களாக விளங்கினர். நிலத்தைக் உழுது இவர்கள் விவசாயம் செய்யவில்லை, ஆனால் கால்நடைகள், இவர்களின் நடமாடும் வீடுகளை இழுக்க பயன்படுத்தப்பட்டன,” என்று கூறியுள்ளார்.

பரந்து விரிந்த எட்டு வகை நேர மண்டலங்கள் வேறுபாடு உள்ள பகுதிவரை இவர்கள் சாம்ராஜ்யம் விரிந்துள்ளது.

ஐரோப்பா, சீனா எல்லைகள், பசிஃபிக் பெருங்கடல், ஆர்டிக் வட்டம் வரை அதன் பரப்பு நீண்டிருந்தது. பனிப்படலம் நிறைந்த வடக்குப் பகுதி, அடர்த்தியான காடுகள் நிறைந்த மத்திய பகுதி, புல்வெளியும் விளைநிலமும் படர்ந்திருந்த தென் பகுதியாக சைபீரியாவை பிரிக்கலாம்.

இதில், பசுமை நிறைந்த மங்கோலியா மற்றும் சீனாவில் இருந்து கருங்கடல் வரை உள்ள பகுதியைக் கொண்டது தென் பகுதி. இங்குதான் சிதியர்கள் தங்களுடைய குதிரையேற்றத்திறனை வளர்த்துக் கொண்டனர். கண்ணுக்கெட்டாத தூரம்வரை இவர்கள் தங்களுடைய குதிரைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றனர்.

குதிரைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து அவற்றை செழுமையான மேய்ச்சல் நிலங்களில் விட்டு, அவற்றை பலம் வாய்ந்த துணையாக இவர்கள் வசப்படுத்திக் கொண்டனர். இயல்பாகவே குதிரையேற்ற திறனை வளர்த்துக் கொண்ட இவர்கள், மேய்ச்சலின்போது இடையூறாக வருபவர்களையும் விலங்குகளையும் வேட்டையாடி வாழ்ந்தனர்.

போரில் மரணம் அடையும் இந்த குதிரைகளைக் கூட அதன் கேடய கவசங்களுடேனேயே புதைத்து தங்களுடைய அன்பை இவர்கள் காட்டியதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த குதிரைகள் மிகவும் ஆரோக்கியமான நிலையில் 15 முதல் 20 ஆண்டுகள்வரை வாழ்ந்ததாக அவற்றின் எச்சங்கள் மூலம் அறிய முடிகிறது.

இதேபோல, போரில் இறந்தவர்களின் உடல்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய தோற்றத்துடன் இருந்ததோ அதேபோன்ற தோற்றத்துடனேயே பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற வழக்கத்தை சிதியர்கள் கொண்டிருந்திருக்கிறார்கள்.

வரலாற்றாய்வாளர்களுக்கு கிடைத்த பல சிதியர்களின் உடல் தசை மாதிரிகள் பலவற்றிலும், அவர்களின் திறனை பறைசாற்றும் விதத்தில் பச்சை குத்தப்பட்டிருந்ததை பார்க்க முடிகிறது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் அருங்காட்சியகத்தில் இதை காணலாம்.

இது தவிர உடல்கள் கெட்டுப்போகாமல் இருக்க, அழுகும் தன்மை மற்றும் கொழுப்புத்தன்மை வாய்ந்த உடல் உறுப்புகளை இவர்கள் அறுத்து வெளியே எடுக்கிறார்கள். தலையில் துளையிட்டு மூளையை எடுக்கிறார்கள், பிறகு உடலை பாதியாக வெட்டி, மாமிச பகுதிகளை வெளியே எடுக்கிறார்கள். வளமான புல்கட்டுகள் உடலுக்குள் வைத்து சீராக தைக்கப்படுகிறது. பின்னர் அந்த உடல் மூலிகை செடிகளால் முலாமிடப்பட்டு புதைக்கப்படுகின்றன.

எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள அங்கெல்லாம் தங்களைத் தாக்கிய எதிரிகள் ஒருவர் கூட உயிருடன் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தினர் சிதியர்கள்.

வெற்றிக்களிப்பில் எதிரியின் உடலில் இருந்து வழிந்தோடிய ரத்தத்தை குடித்து அவர்கள் களிப்படைந்ததாக வரலாற்றாய்வாளர்களை மேற்கோள்காட்டிக் குறிப்பிடுகிறார், பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் ஹேரி மவுன்ட்.

மின்னல் வேகத்தில் குதிரையில் சீறிப்பாய்ந்து எதிரியை தாக்கும் திறமை, நெருப்புப்பந்து போல் அம்பெய்தி எதிரியை வீழ்த்துவது, கபாலத்தை சுக்குநூறாக்குவது இவர்களின் மிருக வெறிக்கு உதாரணம் என்றும் அந்த எழுத்தாளர் கூறுகிறார்.

நிலவளச் செழுமை நிறைந்த பகுதியில் உண்டுக் களித்து இருப்பதை வாழ்வின் நோக்கமாகக் கொண்ட இவர்கள், மாரிஜுவானா போதைச்செடிகளை வளர்த்து அதன் மூலம் மயக்க நிலையில் இன்புற்று இருப்பதை பேரின்பமாகக் கருதினர். போரில் ஏற்பட்ட காயங்கள், வலிகளை மறக்கடிக்க இந்த போதைப்பொருட்கள் இவர்களுக்கு உதவியுள்ளதாக கருதப்படுகிறது.

கிரேக்க வரலாற்றாய்வாளர்கள் சிலர், இவர்கள் ஆரம்ப காலத்தில் பால் பருகுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்றும் நாளடைவில் இவர்கள் கனிந்த திராட்சைப்பழ ரசத்துக்கு அடிமையானதாகவும் குறிப்பிடுகின்றனர். கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்களிடம் இருந்து பழரசம் அருந்தும் பழக்கம் இவர்களுக்கு ஒட்டிக் கொண்டதாகவும் சில பழங்கால புத்தகங்களில் காண முடிகிறது.

ஹெரோடொட்டஸ் புத்தகத்தில், ஒவ்வொரு நாளும் எத்தனை பேரை கொன்றோம் என்பதை குறிக்கும் விதமாக ஒரு தண்ணீர் குவளையில் வெள்ளை நிற சிறு கற்களை போடுவதை சிதியர்கள் வழக்கமாகக் கொண்டிருந்ததாக குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட நாளில் ஒருவர் கூட தங்களால் இறக்காவிட்டால், அந்த குவளையில் கறுப்பு நிற சிறு கல்லை அவர்கள் போடுவது வழக்கம் என்றும் அவர் விவரிக்கிறார். ஒவ்வொரு வீரரும் இறந்த பின், அவர் குவளையில் சேகரித்து வைத்த கற்களின் எண்ணிக்கையை வைத்து அவர்களின் வீரத்தை சிதியர்கள் கெளரவித்ததாகவும் கதை உண்டு.

கி.மு 6ம் நூற்றாண்டில் பைசாண்டைன் கால ராணுவ குறிப்பேட்டில் சிதியர்கள் எத்தகைய போர் தந்திர உத்திகளை கையாண்டு சிறந்த போர் வீரர்களாக திகழ்ந்தனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

சிதியர்கள் என்றொரு நாடோடி கூட்டம், கண்டங்களைக் கடந்து நில ஆக்கிரமிப்புகளை செய்ததும் பல பேரரசுகளின் வீரர்களை கொடூரமாக தாக்கி வீழ்த்தியதும் வரலாற்று நினைவுகள். அதற்கு சான்றாக இருப்பது, பெர்லின், லண்டன், மாஸ்கோ அருங்காட்சியகங்களில் இப்போதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அவர்கள் விட்டுச் சென்ற மிச்சங்கள்.

பஷ்தூன் மக்கள், பார்த்தியர்கள், ஹூணர்கள், தங்களை கிழக்கு சிதியர்களின் வழித்தோன்றல்கள் எனக் கருதுகிறார்கள். மேலும் பிக்ட்ஸ், கால்ஸ், ஹங்கேரியர்களின் ஜாஸ்சிக் மக்கள், செர்பியர்கள், போஸ்னியர்கள், குரோசியர்கள் தங்களை மேற்கு சிதியர்களின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள்.

இந்திய பகுதியில் குப்த பேரரசின் இரண்டாம் சந்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட, மேற்கு சத்திரபதி பேரரசர் மூன்றாம் ருத்திரசிம்மன், சகர் எனும் கிழக்கு சிதியர்களின் சசானிஸ்ட் பேரரசை கி பி 395இல் வென்றார். சிதியர்கள் எனும் சகர்களின் அரசு, இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய சாதவாகனப் பேரரசர் கௌதமிபுத்திர சதகர்னியால் வெற்றி கொள்ளப்பட்டது முதல், சிதியர்களின் அரசு படிப்படியாக வீழ்ச்சி அடையத் துவங்கியது

பிறகு நான்காம் நூற்றாண்டில் இரண்டாம் சந்திர குப்தரால் சகர் எனும் சிதியர்களின் அரசு முழுமையாக வெற்றிக் கொள்ளப்பட்டது.

கி.மு 500 முதல் கி.மு 100வரை வாழ்ந்த சில சிதியர் நாடோடிகள் குழுக்களின் தலைவர்களை வரலாற்றாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதில் அரியாபிஃபா அல்லது அரியாபெய்த்ஸ் அவரது மகன் ஓரிகோஸ், தனது தாய் கிரேக்கத்தவர் என்பதால் சொந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்ட சிலாஸ், சிலாஸுக்கு பிறகு கி.மு 450இல் அரியணை ஏறிய ஓக்டாமசாடஸ் குறிப்பிடத்தக்கவர்கள்.

மெசிடோனிய பேரரசால் வீழ்த்தப்பட்ட அடீயாஸ் (கி.மு 429-339), போன்டஸ் ஆறாம் மித்ரிடேட்ஸ் பேரரசுடனான போரில் மரணம் அடைந்த ஸ்கிலூரஸ் (கி.மு 125-110), மித்ரிடேஸ்ட் ஆளுகையில் வீழ்த்தப்பட்ட சிதியர்களின் கடைசி மன்னரான பலாக்கஸ் (கி.மு 100) இதில் அடங்குவர்.

வரலாற்றில் அந்த்ரோபாகி, அகத்திர்ஸி, அக்ரிப்பியர்கள், அமிரிகியர்கள், புதினி, தாஹே, கெலோனி, கார்காரி, ஹரைவா, லேகே, மாதுரா, பார்னி, சாகா, சாகா ஹெளமாவர்கா, சாகா திக்ராகெளதா, சூரேன் ஆகிய நாடோடிகள் குழுவினர் வாழ்ந்துள்ளனர். இதில் ஒரு சில நாடோடி குழுக்களின் வரலாற்றுச்சுவடுகள் மட்டுமே வரலாற்றாய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளன.

உலகில் பல நாகரிகங்களின் வழித்தோன்றலுக்கு காரணமான சிதியர்கள், சொந்த நாடின்றி நாடோடியாகவே வாழ்ந்து மறைந்ததை உணர்த்தும் வரலாறு பிரமிப்பூட்டுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker