இலங்கை

யாழ். மக்களே அவதானம் ! அபாயகரமான சிக்கலான நிலையை எதிர்கொள்ளும் தறுவாயில் யாழ். மாவட்டம் – அரசாங்க அதிபர்

யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை  மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நேற்று இடம்பெற்றது. கூட்ட நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

யாழ்  மாவட்டத்தில் கொரோனா  தீவிரம் காரணமாக  அவசரமாக மாவட்ட  கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தினை நடாத்தியிருக்கின்றோம்.

இந்த கூட்டத்திற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, அதேபோன்று சுகாதார திணைக்கள வைத்தியர்களும் பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி,  அதேபோன்று கடற்படையின் உத்தியோகத்தர்களும் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ் மாநகரசபை ஆணையாளர்  அதே போன்று இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சபையின் பிரதிநிதி போன்றோர் அழைக்கப்பட்டிருந்தார்கள் .

இன்றைய செயலணி கூட்டத்தில் மிகவும் முக்கியமான விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம் . அதன் பிரகாரம் கம்பஹா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் என்ற அடிப்படையில்  இனங்காணப்பட்டிருந்தார்கள் அதில் இருவர்  புங்குடுதீவை சேர்ந்தவர்கள். இங்கு வருகை தந்திருக்கிறார்கள்  30 ஆம் திகதி மற்றும்  மூன்றாம்  திகதி இரண்டு பேர் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் 3 ஆம் திகதி வந்தவருக்கு கொரோனா  தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அவருடைய நெருங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் புங்குடுதீவு பகுதியில் அதாவது கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

அதேவேளையில் வேலணை பிரதேச செயலர்  பிரிவில் 57 பேர் போக்குவரத்தில்  மற்றும் ஏனைய இடங்களில் அந்த பெண்ணுடன் தொடர்புபட்ட என்ற  அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதைவிட நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உடன் பஸ்ஸில் பயணித்தவர்கள் என்ற அடிப்படையில் சுமார் 88 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அதைவிட மருதங்கேணி பகுதியில் குடாரப்பு கிராமத்திலே 73 நபர்கள் அங்கு சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். 9 பேர்  தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பட்டுள்ளார்கள். இதனைவிட எழுவைதீவைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களை சேர்ந்த 22 பேர் சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

எங்களைப் பொறுத்தவரைக்கும் புங்குடுதீவில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள் அந்த பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்திலே யாழ்ப்பாண மாவட்டம் தற்போதைய அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

ஆகவே அபாயகரமான சூழல்  என்று நாங்கள் தற்பொழுது கருதப்பட வேண்டிய புங்குடுதீவு பகுதி முற்றுமுழுதாக முடக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஏனைய பகுதிகளிலும் சில சில செயற்பாடுகளை அரசாங்கத்தினுடைய அறிவுறுத்தலின் பிரகாரம் முடக்கி இருக்கின்றோம். அல்லது தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றோம்.

அந்த வகையிலே பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன அதனுடன் இணைந்த வகையில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். அதற்குரிய அறிவுறுத்தல்கள் உரிய தரப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் எங்களுடைய தற்போதைய நிலையில் அரசு அலுவலகங்கள் இயங்கலாம். அதேநேரத்தில் வர்த்தக நிலையங்கள் இயங்கலாம். ஆனாலும் கூட அனைவருக்கும்  சுகாதார வழிகாட்டி நடைமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுகாதார நடைமுறைகளை பேணி செயற்படுமாறு நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம்.

ஒவ்வொரு துறையினரும் அதாவது தனியார் வர்த்தக நிலையங்கள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் முச்சக்கர வண்டி சாரதிகள், பேருந்து உரிமையாளர்கள் அரச பேருந்துசேவையினை சேர்ந்தவர்கள் அதேபோல் சினிமா திரையரங்கினை சார்ந்தவர்கள் திருமண மண்டபம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள், அங்காடி வியாபார நிலையங்கள் போன்றவை குறிப்பாக சந்தைகள் போன்றவற்றில் அந்த வழிகாட்டிகளை நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

அந்த வழிகாட்டிகளை முறையாக அமுல்படுத்தும் படி கேட்டுக்கொண்டுள்ளோம். தடையில்லை ஆனால் முறையாக சமூக இடைவெளி பேணி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, கை கழுவி தொற்று நீக்கி  நடைமுறைகளை பின்பற்றுதல் அவசியமாகும்.

ஒவ்வொருவரும் இந்த இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமானது.  அந்த விடயம் தொடர்பில் கண்காணிக்குமாறு பொலிசாரினை அறிவுறுத்தியுள்ளோம். எங்களைப் பொறுத்தவரைக்கும் எங்களுடைய மக்கள் தற்பொழுது சுகாதாரநடைமுறைகளை பின்பற்றுவதில் தளர்வான போக்கினை கடைப்பிடிக்கின்றார்கள்.

இனிவரும் காலங்களில் குறித்த சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் பேருந்தில் பயணிக்கும் போது ஆசன மட்டத்திற்கு அமைவாக பயணிகளை கொண்டு செல்வதற்கு நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம்.

பேருந்துகளையும் முறையாக தொற்று நீக்கி சேவையில் ஈடுபடுத்த மாறும் கோரியுள்ளோம். ஆகவே பொதுமக்கள் இந்த நிலமையை அனுசரித்து நடந்தால் எங்களுடைய தொற்று நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.தொற்று ஏற்படுவதை தடுத்து நிறுத்தலாம்.

பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் நடமாடுவதை கட்டுபடுத்துமாறு பொதுமக்களை கேட்டிருக்கின்றோம். அதேபோல புங்குடுதீவு பகுதிக்கான புங்குடுதீவு ஊடாக நெடுந்தீவு மற்றும் ஏனைய தீவு பகுதிகளுக்கான படகு போக்குவரத்து மற்றும் பஸ் சேவையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அதாவது காலையிலும் மாலையிலும் மாத்திரம் படகு சேவை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அதேபோல் அதற்கு இணைந்ததாக பஸ் சேவையினையும் காலையிலும் மாலையிலும் மட்டுப்படுத்தப்பட்ட  அளவில் குறித்த பஸ் சேவையை நடத்துமாறு நாங்கள் கூறியிருக்கின்றோம். அதனை அனுசரித்து பொதுமக்கள் செயற்படுமாறும் கோருகின்றோம் .

அதேபோல் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இருந்து வேறு பகுதிக்கு செல்வதற்கு எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவே இதனையும் பொதுமக்கள் கவனத்தில் எடுப்பது மிகவும் நல்ல விடயமாகும்.

இந்த விடயங்கள் தொடர்பில் சுகாதார தரப்பினர் மற்றும் பொலிசார் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வார்கள். ஆகவே அரசாங்கம் தற்போது இந்த கட்டுப்பாட்டை முற்றுமுழுதாக விதிக்கவில்லை.  இது ஒரு பகுதி அளவிலேயே தான் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  ஊரடங்கு சட்டம் இன்னும் யாழ் மாவட்டத்தில் பிறப்பிக்கப்படவில்லை. ஆகவே இந்த நிலைமையை உன்னிப்பாக அவதானித்து தொற்றின்  தீவிரத்தை கணித்து அதன் பிரகாரம்  மேலதிக நடவடிக்கைகளை அடுத்த சில மணி நேரங்களிலேயே நாங்கள் எடுக்கலாம் அல்லது ஓரிரு நாட்களில் நாம் எடுக்க வேண்டிய தேவை இருக்கலாம்.

இந்த வகையில் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து இந்த சுகாதார நடைமுறைகளை  சமூக இடைவெளியை பேணி முககவசங்கள் அணிவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். எங்களைப் பொறுத்தவரையிலே தளர்வான காலத்தில் மக்கள் முண்டியடித்து பொருட்களை பெறுவதிலும் எரிபொருள் நிலையங்களில் நேரத்தை வீணாக்குவது அவதானிக்கூடியதாக இருக்கின்றது.

உணவு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அந்த நிலைமைகளை கவனிக்கும்படி நாங்கள் பிரதேச செயலாளர்களும் அதனோடு தொடர்புபட்டதொழில் நிறுவனங்களையும் நாம் கேட்டிருக்கின்றோம். ஆகவே எங்களைப் பொறுத்த வரையில் எந்தவிதமான ஒரு நிலைமையை சமாளிப்பது குறித்து தயார் நிலையில் தான் நாங்கள் இருக்கின்றோம்.

இருந்தபோதிலும் சுகாதார தரப்பினரின் சுகாதார அறிவுறுத்தல்கள் மிக மிக அவசியம். ஏன் என்றால் மட்டுப்படுத்தப்பட்ட  சுகாதார அணியினரால் நிலைமைகளை பராமரிக்க வேண்டியுள்ளது. ஆகவே  அனைவருடன் இணைந்து பொதுமக்கள்  அனைவருடைய ஒத்துழைப்புடனும்  சுகாதார நடைமுறை களையும் பின்பற்றி யாழ்ப்பாண குடாநாட்டில் கொரோனா ஏற்படா வண்ணம் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பி.சி.ஆர். பரிசோதனையில் யாராவது ஒருவருக்குதொற்று  இனங்காணப்பட்டால் எதிர்வரும் நாட்களில் சில மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும் சில பிரதேசங்களை முடக்க வேண்டிய தேவையும் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker