யாழ். கடலில் மிதந்து வந்த பானத்தை அருந்தியவர் பரிதாப மரணம்!

வடமராட்சி கிழக்கு பிரதேச, நாகர்கோவில் கிழக்கு கிராமத்தில் கடற்கரையில் ஒதுங்கிய போத்தல் ஒன்றில் வந்த திரவத்தை சாராயம் என அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீகுமார் என்பவரேயாவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் கடற்றொழிலுக்கு சென்றிருந்த சமயத்தில் கடற்கரையில் ஒதுங்கியிருந்த போத்தல் ஒன்றைக் கண்டெடுத்து பார்த்த போது அதில் வெள்ளை நிறத்திலான திரவம் இருந்ததை அவதானித்தார்.
அதனையடுத்து அங்கு கூடியிருந்த சக தொழிலாளிகளுடன் சேர்ந்து அத்திரவத்தை சாராயம் என நினைத்து அதில் தண்ணீர் கலந்து அருந்தியுள்ளனர். 25 பேர் வரை அருந்திய போதிலும் குறித்த குடும்பஸ்தருக்கே சுகயீனம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம்(9) பிற்பகல் 1.00 மணியளவில் அவருக்கு முடியாமல் போகவே முச்சக்கரவண்டியொன்றில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு விட்டது.
அதனையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விரைவாக எடுத்துச் சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவர் அருந்தியிருந்த திரவத்தையும் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தனர்.
அங்கு ஆய்வுகூடத்தில் அதனை பரிசோதித்த போது அது காயத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்பிறிட் என தெரியவந்தது. உடனடியாக வைத்தியர்கள் இத்திரவத்தை அருந்திய சகலரையும் வைத்தியசாலைக்கு வருமாறு பணித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அங்கு நடந்த விசாரணையின் போது மேற்படி தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.
தற்போது அவரது சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.