இலங்கை

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: சந்தேகத்தில் 6 இராணுவத்தினர் கைது – மூவருக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (8) முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போன நிலையில் இன்று காலை (09) குறித்த குடும்பஸ்தர் குளத்திலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த இளைஞனின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்ட நிலையில், சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என அழைப்பு எடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதில், முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே காணாமல்போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (07) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதனையடுத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுதினர் ஒருவரால் தொலைபேசியில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஐவர் சென்றுள்ளனர்.

இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகிய நிலையில், இன்று காலை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இன்றையதினம் இராணுவ முகாமிற்கு சென்ற இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

காணாமல்போன குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி நேற்று வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதும் குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்றுகாலை மீட்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த காணாமல்போன இளைஞனின் சகோதரரால் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker