முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை – பதிலடி கொடுக்குமா மேற்கிந்திய தீவுகள் அணி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இலங்கை அணி இன்னும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் பங்கேற்கின்றது.
இரு அணிகளுக்கும் இடையே கடந்த 22ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.
கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தில் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறாத நிலையில், ஐந்து வருடங்களின் பின்பு இன்று இந்தப் போட்டி இடம்பெறுகின்றது.