ரி-20 தொடரில் இலங்கை அணியை வயிட் வோஷ் செய்தது அவுஸ்ரேலியா அணி!

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான ரி-20 போட்டியில் அவுஸ்ரேலியா அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், இலங்கை அணியை அவுஸ்ரேலியா வயிட் வோஷ் செய்தது.
மெல்பேர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, முதல் ஒவரிலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது. அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பிடியெடுப்பு கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய குசல் பெரேரா, மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிசுடன் ஜோடி சேர்ந்து, 30 ஓட்டங்ளை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்ட வேளை, குசல் மெண்டிஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவிஷ்க பெனார்டோ, குசல் பெரேராவுடன் ஜோடி சேர்ந்து 43 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, அவிஷ்க பெனார்டோ 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பிறகு களமிறங்கிய ஒசேத பெனார்டோ 6 ஓட்டங்களுடன் ஏமாற்ற, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த குசல் பெரேரா 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார்.
இதனையடுத்து செஹான் ஜயசூரிய 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 17 ஓட்டங்களுடனும், லசித் மாலிங்க ஆட்டமிழக்காது 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்க, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக், கேன் ரிச்சட்சன் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, 143 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, ஆறுதல் அளிக்கும் ஆரம்பத்தை பெற்றுக் கொண்டது.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பின்ஞ் ஆகியோர் இணைந்து ஆரம்ப விக்கெட்டுக்காக 69 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.
இதில் ஆரோன் பின்ஞ் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினாலும், முக்கிய சாதனையொன்றை பதிவு செய்தார்.
அதாவது, அவுஸ்ரேலியா அணி சார்பில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை டேவிட் வோர்னருடன் பகிர்ந்துக் கொண்டார். இருவரும் தலா 84 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இந்த பட்டியலில் முன்னாள் வீரர் ஷேன் வோட்சன் ஆகியோர் 83 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித், 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பென் மெக்டர்மோர்ட் 5 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.
இதன்பிறகு களத்தில் நங்கூரமிட்ட டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும், ஆஷ்டன் டர்னர் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள அவுஸ்ரேலியா அணி, 17.4 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை கடந்தது. இதன்படி அவுஸ்ரேலியா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலியா அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 50 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்ரிகள் அடங்களாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டேவிட் வோர்னர் தெரிவு செய்யப்பட்டார்.
அத்தோடு, முதல் போட்டியில் தனது முதலாவது சதம், இரண்டாவது ரி-20 போட்டியில் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்கள், தற்போது ஆட்டமிழக்காது 57 ஓட்டங்கள் என ஓட்டங்களை குவித்தமைக்காக அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
மேலும், ரி-20 கிரிக்கெட்டில் தொடரொன்றில் ஆட்டமிழக்காது அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்கள் வரிசையில் டேவிட் வோர்னர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
டேவிட் வோர்னர் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 217 ஓட்டங்களை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ஆரோன் பின்ஞ் 240 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், லசித் மாலிங்க, லஹிரு குமார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
ரி-20 கிரிக்கெட்டில் முதல்நிலை அணியான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய சாதனையோடு, அவுஸ்ரேலியா சென்ற இலங்கை அணி, தற்போது பெரும் ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளது.