சந்திரிக்காவின் கூட்டத்தில் கலந்துகொண்டால் கடும் நடவடிக்கை – மஹிந்த

கொழும்பு, சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு எனும் பெயரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திலேயே கலந்துகொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு எதிராக மத்திய குழுவில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இராஜகிரியவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பவர்கள் எனக் கூறிக்கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் வாக்குகளை இல்லாமல் செய்து, சஜித் பிரேமதாசவை வெற்றிப்பெற செய்யும் வகையிலேயே சந்திரிக்கா – குமார வெல்கம ஆகியோர் செயற்படுகின்றனர்.
சஜித் பிரேமதாசவை வெற்றியடையச் செய்யும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் குமார வெல்கமவும் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் ரணில் விக்ரமசிங்கவின் பினாமிகள்” என்று தெரிவித்துள்ளார்.