கல்வி

மாணவர் அதிக புள்ளிகள்!!! பெறுவதில் ஆசிரியர் வகிபாகம்… நீங்களும் ஆசிரியர்

 

மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக காணப்படுவது ஆசிரியர்களின் கற்பித்தல் முறையாகும். ஆசிரியர் மாணவர்களின் இயல்புத் தன்மை, சுபாவம், தேவை, முயற்சி என்பவற்றுக்கேற்ப தனது கற்பித்தல் முறைகளை வடிமைத்துக் கொள்ள வேண்டும். வினைத் திறனான கற்பித்தல் முறையினூடாக சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம்.

தனது செயலை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக கற்பித்தலின் போது பல்வேறு முறைகளை ஆசிரியர்கள் பின்பற்றி வருகின்றனர்.வெற்றிகரமான கற்றல், கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர் பல்வேறு கற்பித்தல் முறைகளை கையாளுகின்றார். ஆசிரியர் பயன்படுத்தும் கற்பித்தல் முறைகள் வருமாறு:

விரிவுரை முறை என்பது சம்பிரதாய பூர்வமான கற்பித்தல் முறையாகும். இம்முறையானது ஆசிரியர் மையத்தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது. ஆசிரியர் இம்முறையில் கற்பிப்பதால் மாணவர் செயற்படுவது குறைவாக இருக்கும். உயர் வகுப்புகள், செயலமர்வுகள் போன்றவற்றுக்கு இக்கற்பித்தல் முறை பொருத்தமானதாக இருக்கும். குறுகிய விரிவுரைகளை நிகழ்த்தி, அதன் பின்னர் முன்வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும். மேலும் பல்வேறு வரைபடங்கள் வீடியோப் படங்கள் காட்சிப்படுத்தல் போன்ற முறைகளினூடாக விரிவுரை அமையும் போது விரிவுரை வினைத்திறனுடையதாகவிருக்கும். விரிவுரை முறையினூடாக பொறுமை சகிப்புத்தன்மை அமைதி ஒத்துழைப்பு கிரகித்தல் மதிப்பளித்தல் செவிமடுத்தல், பணிவுடன் கலந்துரையாடல் போன்ற விழிமியப்பண்புகள் பிள்ளையிடம் வளர்க்கப்படுகின்றன.

குழு முறை இன்று பாடசாலைகளில் பரந்தளவில் பயன்படுத்தும் கற்பித்தல் முறையாகும். சிறுபிள்ளைகள் சமவயதுக் குழுவினருடன் செயற்படுவதற்கு விரும்புவர். இதனால் பிள்ளைகள் ஆரம்ப வகுப்புகளில் குழுமுறையில் வகுப்புகளில் அமர்கின்றனர். 5E கற்பித்தல் முறையின் போது குழு முறை பயன்படுத்தப்படுகிறது. வகுப்பில் அனைத்து மாணவர்களையும் சிறு குழுக்களாகப் பிரித்து கருத்துக்களை சேகரிப்பதற்கு குழுக்களாக பிள்ளைகளை ஈடுபடுத்தல் இதன் அடிப்படை நுட்பமாகும். இக்குழுமுறையில் தேடியறிதல், ஒப்படை, விளையாட்டு என்பவற்றில் பிள்ளைகள் குழுக்களாக ஈடுபட்டு கற்பர். இதன் போது இக்குழுமுறை கற்பித்தலை மேற்கொள்ளலாம். இக்கற்பித்தல் முறையானது சிறந்த கற்பித்தல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.

வினாவுதல் முறையை பாடப் பிரவேசத்தின் போது கற்பித்த விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் மதிப்பீடு செய்து கொள்வதற்கும் ஆசிரியர் பயன்படுத்துவர். அத்துடன் இந்நுட்ப முறையை ஏனய கற்பித்தல் முறைகளுடன் தொடர்பு படுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும்.

ஒப்படை வழங்கல் முறை என்பதில் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒப்படைகளை மேற்கொள்ள முடியும். இடைநிலைக் கல்வியில் மாத்திரமன்றி ஆரம்பக் கல்வியிலும் ஒப்படை முறையை பயன்படுத்த முடியும். இது முழுமையாக மாணவரை மையமாகக் கொண்ட ஒரு கற்பித்தல் முறையாகும். சமகாலப் பிரச்சினை ஒன்றை அடிப்படையாகக் கொள்ளுதல், அல்லது பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொள்ளுதல், செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தக்கூடிய விடயம் ஒன்றை நடைமுறைப்படுத்தல், விஞ்ஞானப் பாடம் தொடர்பாக அனுபவம் பெறல், போன்ற விடயங்கள் ஒப்படையாக மேற்கொள்ள முடியும்.

கண்டறிதல் முறை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறையாகும். யாதாயினும் ஒரு பிரச்சினையை அல்லது சம்பவத்தை தேர்ந்தெடுத்து அது தொடர்பில் அனைத்து தகவல்களையும் சேகரித்து அவற்றை பகுப்பாய்வுக்குட்படுத்தி அதனூடாக தேவையான பதிலை அல்லது அறிவை ஒன்று திரட்டிக் கொள்ளல் இங்கு எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு முறை கற்பித்தல் முறையில் மாணவர் உற்சாகத்துடன் ஈடுபடுவர். கணிதம், மொழி, சங்கீதம் போன்ற பாடங்களை விளையாட்டு முறை மூலம் கற்பிக்க முடியும். ஆரம்பப் பிரிவு மாணவர்கள் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுவர். சிறு பிள்ளைகளுக்கான வெற்றிகரமான ஒரு கற்பித்தல் முறையாக இதனைக் கருத முடியும். வகுப்பறைக்கு வெளியில் அல்லது விளையாட்டு முற்றத்தில் இக்கற்பித்தலை மேற்கொள்ளும் போது பிள்ளைகளுக்கு செயற்பாட்டு ரீதியான அனுபவம் கிடைப்பதோடு வகுப்பறையும் பாடசாலையும் பிள்ளைகளுக்கு பிடித்தமான இடமாக மாறும்.

 

சிந்தனைக் கிளறல் -முறை என்பது ஏதேனும் ஒரு பிரச்சினை அல்லது முரண்பாடு தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு மாணவருக்கு சந்தர்ப்பம் வழங்கி அவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுவதாகும். முதலில் மாணவர் முன்வைக்கும் சகல கருத்துக்களை நிராகரிக்காமலும், திருத்தியமைக்காமலும், விமர்சிக்காமலும் இருத்தல் வேண்டும்.

 

வெளிக்களக் கற்கை முறையானது வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை ஆசிரியர் அழைத்துச் சென்று கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை குறிக்கும். இடை நிலை மாணவருக்கே இது மிகவும் பொருத்தமானதாகும். ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் வயதுக் குழுவினருக்கேற்ப பொருத்தமான வேலைத் திட்டங்களை தீர்மானித்து இவற்றை நடைமுறைப் படுத்தலாம்.

வெறும் வேடிக்கை வினோதங்களுக்காக மாத்திரம் கல்விச் சுற்றுலாக்கள் செல்லாது மாணவரின் அறிவு வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் கல்வி சுற்றுலாக்கள் அமைய வேண்டும். விஞ்ஞான ரீதியான விடயங்கள் புவியின் அம்சங்கள் வரலாறுகள் தொல் பொருளியல் சார் விடயங்கள் என்பவற்றை உயர் வகுப்பு மாணவர்களுக்கு பெருத்தமான விதத்தில் திட்டமிட்டு கல்விச் சுற்றுலாக்களை திட்டமிட்டு மாணவர் அனுபவரீதியாக கற்பதற்கு வழிப்படுத்த வேண்டும்.

 

நுண்முறைக் கற்பித்தல் முறையை வகுப்பறையில் கற்பிக்கும் போது விளங்காத மாணவரை, இடர்படுபவர்களை தனியாக அழைத்து உரிய பாடவிடயத்தை ஆசிரியர் தெளிவுபடுத்தி விளங்கிக் கொள்வதற்கு பயன்படுத்த முடியும். இடர்படும். மாணவரை கரும்பலகைக்கு அருகில் அழைத்து ஐந்து, பத்து நிமிடங்கள் தனிமைப்படுத்திக் கற்பிக்க வேண்டும்.

 

முன்வைத்தல் என்பது கற்றல் கற்பித்தல் என்பதை விட தனியாளின் ஆற்றலை அல்லது தகைமையை வெளிப்படுத்தும் ஒரு அணுகு முறையாக கருதப்படுகிறது. இது வயது வந்தோருக்கான கல்வியில் இதனை ஓர் கற்றல் முறையாகவும் பயன்படுத்த முடியும்.

 

போலச்செய்தல் கற்றல் கற்பித்தல் முறையில் பிள்ளை நேரடியான கற்றல் அனுபவத்தை பெற்றுக் கொள்வர். ஒரு செயற்பாடு நிகழ்வதை அவ்வாறே முன்வைத்தல் போலச் செய்தலாகும். அதற்கிணங்க பெறப்படும் அனுபவம் முழுமையான கற்றலாகும். இம்முறையைப் பிரயோகித்து முன்வைக்க எதிர்பார்க்கும் அறிவுத் தொகுதியானது மிகவும் வினைத்திறனுள்ளதாக அமையும்.

பிள்ளைகளுக்கு ஏதாவதோர் விடயம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இக்கற்பித்தல் முறை பயன்படுகிறது போலச் செய்தல் முறை செயற்பாடுகளில் பிள்ளைகள் ஈடுபடுவதில் விருப்பமுடையவர்களாக இருப்பர். எனவே இவ்வாறான கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்தும் போது சிறந்த பரீட்சை அடைவு மட்டத்தை பெறலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker