மனிதநேயப்பணிகளை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி-ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன்

வி.சுகிர்தகுமார்
மனிதநேயப்பணிகளை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியினை தெரிவிப்பதாக குறிப்பிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் இப்பணிகளில் ஈடுபடும் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதியை பெற்று பொலிசாரின் பாதுகாப்புடன் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் இன்று(25) காலை 10 மணிமுதல் 12 மணிவரைக்குமான காலப்பகுதியில் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தன்னுடன் கலந்துரையாடி கிராம உத்தியோகத்தர்களின் தெரிவுப்பட்டியலுக்கு அமைய உணவுப்பொதிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதனால் ஒருவர் பலமுறை நிவாரணத்தினை பெறுவது தவிர்க்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் ஊரடங்கு சட்ட காலத்தில் இப்பணியை முன்னெடுக்க பொலிசாரின் அனுமதி பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவ்வாறு பணியில் ஈடுபடுகின்றவர்களின் பெயர் விபரம் மற்றும் பயன்படுத்துகின்ற வாகனங்களின் இலக்கங்களையும் எடுத்து வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் இக்கட்டான இச்சூழ்நிலையிலும் மனிநேயப்பணியினை சிறப்பாக முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த அவர் இப்பணியில் பிரதேசத்தில் உள்ள சமய சமூக அமைப்புக்களும் தனியாரும் கைகோர்த்து வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.
அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய பிரதேச கொரேனா பாதுகாப்பு செயலணியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய அத்தியாவசிய உணவுப்பொருட்களையும் மரக்கறி உள்ளிட்ட பொருட்களையும் வீடு வீடாக கொண்டு சென்று விநியோகிக்க விரும்பும் வர்த்தகர்களுக்கான விசேட அனுமதியும் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவ்வாறான வர்த்தகர்கள் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.