குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ட்ரம்ப் தோல்வி!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார்.
ட்ரம்ப் மீது ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 14 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230 பேரும், எதிராக 194 பேரும் வாக்களித்துள்ளனர்.
பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள குறித்த தீர்மானம் செனட் சபையில் விவாதத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
விசாரணைக்கு பின்னர் செனட் சபையில் வாக்கெடுப்பு நடக்கும் என்பதால் ட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவிக்கு உடனடியாக சிக்கல் இல்லை என கூறப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைனில் சதி திட்டம் தீட்டினார் என்றும் அவருக்கு எதிராகச் சதிசெய்ய உக்ரைன் ஜனாதிபதியிடம் பேரம் பேசினார் என்றும் டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சதித் திட்டத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு ட்ரம்ப் முரணாக நடந்துகொண்டார் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.