ஆன்மீகம்

மகிழ்ச்சியான வாழ்வை தரும் ‘மகா சிவராத்திரி’

சிவபெருமானுக்கு, திங்கட்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ‘சோமவார விரதம்’, தீபாவளி அமாவாசையை ஒட்டி வரும் ‘கேதார கவுரி விரதம்’, மார்கழி மாதத்தில் வரும் ‘திருவாதிரை விரதம்’, தை மாத பூசத்தன்று வரும் ‘பாசுபத விரதம்’, பங்குனி மாதத்தில் வரும் ‘உமாமகேஸ்வர விரதம்’ என்று பல விரதங்கள் இருந்தாலும், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் ‘மகா சிவராத்திரி’ முதன்மையானதாகத் திகழ்கின்றது.

ஒரு பிரளய காலத்தின் போது, பிரம்மதேவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டன. அந்த ஊழிக்கால இரவு வேளையில் பார்வதி தேவியானவள், சிவபெருமானை நினைத்து நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்து வழிபட்டாள். அந்த இரவே `மகா சிவராத்திரி’ என்று சொல்லப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி கொடுத்தார், சிவபெருமான். அவரிடம் பார்வதிதேவி, “நான் உங்களை பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் உங்கள் பெயரிலேயே ‘சிவராத்திரி’ என்று கடைப்பிடிக்க வேண்டும். அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை உதிக்கும் வரையான கால நேரத்தில், உங்களை பூஜிப்பவர்களுக்கு அனைத்து பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்” என்று வேண்டினாள். அதன்படியே இந்த சிவராத்திரி வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிவராத்திரி தினத்தன்று, ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். சிவனை நினைத்தாலே நம் வாழ்க்கை மாறும். சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.

பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும். அதன் பின், ஆலயத்திற்குச் சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக, மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை கொடுத்துவிட்டு வீடு திரும்பவேண்டும். வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம். அல்லது கோவில்களில் நடைபெறும் நான்கு ஜாம சிவ பூஜையில் கலந்துகொள்ளலாம்.

வேடன் ஒருவன் வேட்டையாட காட்டுக்குச் சென்றான். காட்டின் பல பகுதிகளில் அலைந்து திரிந்தும், அவனுக்கு ஒரு விலங்கு கூட கிடைக்கவில்லை. பொழுதும் இருட்டிவிட்டது. புலி நடமாட்டம் உள்ள காடு என்பதால், ஒரு மரத்தில் ஏறி அமர்ந்தான். அது வில்வ மரம். அப்போது அங்கு வந்த புலி ஒன்று, அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. மரத்தில் கண் அயர்ந்தால், கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடக்கூடும் என்பதால், தூங்காமல் இருந்தான். தூக்கம் வராமல் இருப்பதற்காக மரத்தில் இருந்து இலைகளைப் பறித்து கீழே போட்டபடியே இருந்தான்.

அவன் போட்ட இலைகள் எல்லாம், மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் மகா சிவராத்திரி ஆகும். அவன் தனக்கே தெரியாமல் இரவு முழுவதும் கண் விழித்து இருந்து சிவலிங்கத்தின் மீது வில்வ இலையை போட்டு அர்ச்சித்து, வழிபாடு செய்திருந்தான். அதன் காரணமாகவே அவனுக்கு முக்தி கிடைத்ததாக புராணக் கதை ஒன்று சொல்கிறது. எனவே மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களும், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகி விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker