மீண்டும் வீழ்ந்தது இலங்கை: ரி-20 தொடரை முழுமையாக வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி!

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
பல்லேகல மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, தசுன் சானக ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பெபியன் அலென் 2 விக்கெட்டுகளையும், செல்டோன் கொட்ரேல், ஒசேன் தோமஸ் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 17 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பிரெண்டன் கிங் 43 ஓட்டங்களையும், சிம்ரொன் ஹெட்மியர் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும், ஆந்ரே ரஸ்ஸல் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் ஆந்ரே ரஸ்ஸல் தெரிவு செய்யப்பட்டார்.