நைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு!

வடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக மாநில ஆளுநர் பெல்லோ மாதவல்லே தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாணவிகள் அதிகாரிகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு மீட்கும் தொகை எதுவும் செலுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
கடத்தப்பட்ட மொத்த மாணவிகளின் எண்ணிக்கை 279 என்றும், மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜங்கேபே நகரில் உள்ள அரச நடுநிலைப் பாடசாலையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான மாணவிகளை ஆயுதமேந்திய கும்பல் கடத்திச் சென்றது.
அருகிலுள்ள இராணுவச் சாவடி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த, மறுபுறம் பாடசாலைக்குள் பல மணி நேரம் இருந்த ஆயுதக் குழுவினர் அங்கிருந்த மாணவிகளை கடத்திச் சென்றனர்.
பாடசாலை பதிவேட்டின்படி, 317 மாணவிகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 279 மாணவிகளே கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்குள் நைஜீரியாவின் மூன்றாவது பாடசாலை கடத்தல் சம்பவம் இதுவாகும்.