ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவுகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச கொரோனா தடுப்பு செயலணிக்கூட்டம்

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் 31பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவுகள் நேற்றுமுதல் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்காணப்பட்டது.

மேலும் பாடசாலைகள் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டதுடன் அரச திணைக்களங்கள் வங்கிகள் பகுதியளவில் திறக்கப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட ஆலையடிவேம்பு பிரதேச கொரோனா தடுப்பு செயலணிக்கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று(27) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன், வைத்தியர் திருமதி எஸ்.அகிலன், உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர், கணக்காளர் க.பிரகாஸ்பதி நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா பிரதேச சபை செயலாளர் இ.சுரேஸ்ராம் இராணுவ அதிகாரி மேஜர் தம்மிக்க வீரசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் ரி.ஜெயசீலன் உள்ளிட்ட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் ஆலய தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் வர்த்தக சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கொரோனா தொற்றுடையவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் பிரதேச செயலாளர் விளக்கமளித்தார். இதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் கூறினார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 143 பேரின் மாதிரியில் உடனடி அன்ரிஜன் பரிசோதனையின் படி 21பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் மாதிரி பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்படலாம் என்பது தெரியாது.

இதேநேரம் தொற்றுடையவர்களுடன் நெருங்கி பழகிய 200 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளோம். இதில் எத்தனை பேர் அடையாளப்படுத்தப்படுவர் என்பதும் தெரியாது. இந்நிலையில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என கூறினார்.

இந்நிலையில் இங்கு கருத்து தெரிவித்த பொலிசாரும் இராணுவத்தினரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது அத்தியாவசிய தேவைகளின்றி நடமாடுவோர் கைது செய்யப்படுவர் எனவும் விவசாய நடவடிக்கை மற்றும் அத்தியாவசிய தேவைகளின் பிரகாரம் வெளிச் சொல்வோரை அனுமதிக்க முடியும் எனவும் அவர்களுக்கான விசேட பாஸ் ஒன்றினை பிரதேச செயலகம் ஊடாக வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த நிலையில் பின்வரும் சில தீர்மானங்கள் பிரதேச செயலாளர் தலைமையில் எடுக்கப்பட்டது.

பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையின்றி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் பொருட்தட்டுப்பாடு ஏற்படலாம் எனும் மக்களது தேவையற்ற பீதியினை இல்லாது செய்தல்.

விவசாயிகள் தங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் நடவடிக்கைகளை தங்கு தடையின்றி முன்கொண்டு செல்லல் மற்றும் அதற்கான உதவியினை பொலிசார் இராணுவத்தினர் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.

விவசாய உற்பத்தி மற்றும் மரக்கறி உள்ளுர் விற்பனையாளர்கள் மற்றும் மீனவர்களுடன் விசேட கலந்துரையாடலை இன்று பிற்பகல் 4 மணியவில் பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளல், அவர்களுக்கான வாய்ப்பை எற்படுத்தி கொடுத்தல்.

உள்ளுர் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்வோரை ஊக்குவித்தல்
மக்களுக்கான அறிவுறுத்தல்களை ஆலய ஒலிபெருக்கி ஊடாக அவ்வப்போது வழங்கல்
மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்தல்.

பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கையினை நடைமுறைப்படுத்தல்
பிரதேச செயலக உத்தியோகத்தர்களை ஜந்து குழுவாக பிரித்து பொருட்களை வழங்கல் மற்றும் அரச உதவிகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்;ட மக்களுக்கான சேவையினை பெற்றுக்கொடுக்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் செயற்படவேண்டும் எனவும் இதன் மூலம் மாத்திரமே நமது பிரதேசத்தையும் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பில் தகவல்கள் பெற விரும்புகின்றவர்கள் பிரதேச செயலக தொலைபேசி இலக்கமான 0672277436 எனும் இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker