ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது

ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடக்கிறது.
இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா 5 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் முதல் இடம் பிடித்தது. இதனால் உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றது.
‘பி’ பிரிவில் அயர்லாந்து 4 வெற்றி, 2 தோல்விகளுடன் ஓட்ட விகிதம் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது. இதன்மூலம் அயர்லாந்து அணியும் உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றது. முதல் பிளே-ஆப் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி நெதர்லாந்து 3 வது அணியாக தகுதி பெற்றது.
நேற்று நடைபெற்ற 3 வது குவாலிபையிங் பிளே-ஆப் பேட்டியில் ஸ்காட்லாந்து – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த ஸ்காட்லாந்து 198 ஓட்டங்கள் குவித்தது. முன்சே 65 ஓட்டங்களும், பெர்ரிங்டன் 18 பந்தில் 48 ஓட்டங்களும் சேர்த்தனர்.
பின்னர் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 108 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் ஸ்காட்லாந்து 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து ரி20 உலகக் கிண்ணத்துக்கான முதல் சுற்றுக்கு தகுதி பெற்றது.