இலங்கை

பெசில் ராஜபக்ச, சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்

புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச, இலங்கையில் உள்ள அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களை அவசர அவசரமாக சந்தித்துள்ளார். நம்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்று கூறுகிறார். அதற்கு இந்த தூதுவர்கள் உதவ வேண்டுமெனவும் கூறுகிறார். புதிய நிதியமைச்சரின் கருத்து சரிதான்.

ஆனால், சர்வதேச நாடுகளை வளைத்து போட, நிதியமைச்சரை மாற்றி, தூதுவர்களை சந்தித்து கோரிக்கை விடுப்பது மாத்திரம் போதாது. இலங்கை அரசாங்கம் தனது,  “போலி தேசியவாத” கொள்கையை மாற்ற வேண்டும். இனவாதத்தை கைவிட்டு, தமிழ், முஸ்லிம்  மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.

அதேபோல் இலங்கை அரசாங்கம், உலக நாடுகளுக்கு தந்துள்ள தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள்,  சட்டத்தின் ஆட்சி ஆகியவை பற்றிய உறுதிமொழிகளை காப்பாற்றுகின்றதா என்பதை, இந்த அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களும் உறுதி செய்து விட்டு, இலங்கை அரசுக்கு உதவ முன்வர வேண்டும். அதைவிடுத்து விட்டு, தங்கள் சொந்த நலன்களுக்காக, தமிழ் பேசும் மக்களின் தோள்களில் சவாரி ஓட இனியும் முனைய கூடாது. உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு தமிழ் மக்களை தள்ளி விட வேண்டாம். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என, இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து “வன் பெல்ட்-வன் ரோட்”  என்ற சீனாவின் பட்டுப்பாதையில் தமிழ் மக்களும் பயணிக்கும் நிலைமையை உருவாக்கிட வேண்டாம் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

இவ்விவகாரம் பற்றி தமுகூ தலைவர் மனோ எம்பி மேலும் கூறியதாவது,   

புதிய துடைப்பான் நன்றாக துடைப்பது போன்று, புது நிதி மந்திரி பதவிக்கு வந்தது முதல் நன்றாக சுறுசுறுப்பாக இயங்குகிறார். விளைவுகள் இன்னமும் வெளிவரவில்லை என்றாலும், பெசில் ராஜபக்ச அரசுக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் ராஜபக்ச சகோதரர்களின் தோல்வியால் துவண்டு போயிருந்த இலங்கை பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு பெசில் ராஜபக்சத்தான் இப்போது கிடைத்துள்ள  ஒரே துருப்பு சீட்டு என நன்றாக தெரிகிறது.

இவரது மூத்த சகோதரர் பிரதமர் முன்னாள் நிதிமந்திரி மகிந்த ராஜபக்ச தந்து கையில் எப்போது ஒரு மந்திர பந்தை வைத்து உருட்டிக்கொண்டே இருப்பார். கடிசியில் அந்த மந்திர பந்து சரியாக வேலை செய்யவில்லை எனத்தெரிகிறது. அது சரியாக வேலை செய்து இருந்தால், அவர் பதவி விலகி அந்த இடத்துக்கு பெசில் வர வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்காதே.

இப்போது புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச, ஏறக்குறைய எனக்கு எதிரிலேதான் ஆளும்தரப்பில் அமர்ந்துள்ளார். அலாவுதீனின் அற்புத விளக்கை, பெசில் தனது கையில் வைத்திருக்கின்றாரா என நான் அவர் பாராளுமன்றம் வந்த நாளன்று தேடி பார்த்தேன். அலாவுதீனின் அற்புத விளக்கை காணோம். தனது அலுவலகத்தில் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.

‘அண்டா-கா-கசம், அபூ-கா-கசம்-திறந்திடு சீசே’ என்ற மந்திரத்தை சொல்லி, கொள்ளையன் அபு ஹுசைனின் ரகசிய குகையை திறந்து, தங்கத்தையும், வைரத்தையும், செல்வத்தையும், நம்ம அலிபாபா எடுத்து தந்ததை போல, நம்ம புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்சவும் மக்களுக்கு மந்திரத்தால் நிவாரணம், விலைகுறைப்பு, சம்பள உயர்வு, இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு, அனைவருக்கும் எல்லையில்லா தடுப்பூசி என்று வரிசையாக எடுத்து விடுவார் என எதிர்பார்த்தேன்.

அவர் தற்போது, அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களை சந்தித்து ஒத்துழைப்பை கோரி உள்ளார். நிறைய முதலீடுகளையும், கடன்களையும், நன்கொடைகளையும், நிதிமந்திரி கோரினார் என எனக்கு ஒரு மேற்குலக வெளிநாட்டு தூதுவர் கூறினார்.  நல்ல விசயம்தான். எப்படியாவது மக்களுக்கு நல்லது நடந்தால் சரி. எமது அரசாங்கம் விரைவில் வரும். அதுவரை கஷ்டத்தை பொறுத்துக்கொண்டு இருங்கள் என நான் அரசியல் நோக்கில் பேச மாட்டேன். எங்கள் மக்களுக்கு நன்மை கிடைத்தால், நாம் உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும், அது நம்ம அரசாங்கம்தான்.

ஆனால், புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்சவும், அவரது ஜனாதிபதி சகோதரரும், பிரதமர் சகோதரரும், தமது கொள்கைகளை மாற்ற வேண்டும். தொட்டதுக்கு எல்லாம்  போலி தேசியவாதம் பேசி, நாடு பறி போகிறது என்று கூறி, சிங்கள இனம், பெளத்த மதம் ஆகிய இரண்டையும் இழுத்து விடும் பலகத்தி கைவிட வேண்டும். தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள்,  சட்டத்தின் ஆட்சி ஆகியவை தொடர்பில் உலகத்துக்கு கொடுத்த உறுதி மொழிகளை நிலை நாட்ட முன் வர வேண்டும். தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க இலங்கை மக்களின் மனங்களை வெல்ல முயல வேண்டும்.  அப்படி செய்தால், இலங்கை நாட்டை நோக்கி  முதலீடுகள் குவியும். செல்வம் குவியும். வானளாவ வளம் குவியும்.

அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய நாட்டு தூதுவர்களுக்கும் ஒன்றை கூற விரும்புகிறேன். இந்த செய்தியின் மொழிபெயர்ப்பு இவர்கள் கவனத்துக்கு போகும் என எனக்கு தெரியும். தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க இலங்கை மக்களை இந்த அரசாங்கம் நியாயமாக நடத்துகிறதா என தேடி பாருங்கள். தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள்,  சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உறுதி செய்ய சொல்லுங்கள். உங்கள் சொந்த நலன்களுக்காக தமிழ் மக்களை இணயும் பயன்படுத்த முயல வேண்டாம்.  உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு தமிழ் மக்களை தள்ளி விட வேண்டாம். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என, இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து “வன் பெல்ட்-வன் ரோட்”  என்ற சீனாவின் பட்டுப்பாதையில் தமிழ் மக்களும் பயணிக்கும் நிலைமையை உருவாக்கிட வேண்டாம் எனக்கூறி வைக்க விரும்புகிறேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker