ஐ.பி.எல்.: சம்சன்- டி வட்டியாவின் அதிரடியுடன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
சார்ஜாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் மாயங் அகர்வால் ஆகியோர் அணிக்காக சிறப்பானதொரு இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர்.
இருவரும் இணைந்து ஆரம்ப விக்கெட்டுக்காக 183 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.
16.3ஆவது ஓவரின் போது மாயங் அகர்வால் 106 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில், ஆட்டமிழந்து வெளியேறினார்.
நடப்பு தொடரில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது சதத்துடன் அவர் ஓய்வறை திரும்பினார். முன்னதாக பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் ராகுல் சதம் விளாசியிருந்தார்.
அத்துடன், இருவரும் இணைந்து பெற்றுக்கொண்ட இணைப்பாட்டம், ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் பஞ்சாப் அணி சார்பில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச இணைப்பாட்டமாகும்.
முன்னதாக 2011ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கெதிராக கில்கிறிஸ்ட் மற்றும் ஷோன் மார்ஷ் ஆகியோர் 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதே முன்னைய இணைப்பாட்ட சாதனையாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த கே.எல். ராகுல் 69 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
மேக்ஸ்வெல் 9 பந்துகளுக்கு 2 பவுண்ரிகள் அடங்களாக 13 ஓட்டங்களையும், நிக்கோலஸ் பூரான் 8 பந்துகளுக்கு 3 சிக்ஸர், 1 பவுண்ரி அடங்களாக 25 ஓட்டங்களையும் பெற, பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஜொப்ரா ஆர்செரின் இறுதி ஒவரில் மட்டும் 18 ஓட்டங்கள் பெறப்பட்டது. இதில் பூரான் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்ரி விளாசினார்.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், ராஜ்புட் மற்றும் டொம் கர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இந்த வெற்றி இலக்கே நடப்பு தொடரில் ஒரு அணி பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது.
இந்த இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, ஆரம்ப விக்கெட்டை சொற்ப ஓட்டங்களுக்கு இழந்தது.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜோல் பட்லர், 4 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில், ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சம்சன் களத்தில் நங்கூரமிட, மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் அணித்தலைவருமான ஸ்மித்தும், சம்சனும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
இருவரும் இணைந்து 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, ஸ்மித் அரைசதத்தை பூர்த்தி செய்த பெருமையோடு ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார்.
இதன்பிறகு களமிறங்கிய ராகுல் டி வட்டியா நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடி காட்டி வந்த சஞ்சு சம்சன் 85 ஓட்டங்களுடன் விடைகொடுத்தார். சஞ்சு சம்சனை 49 ஓட்டங்களின் போதே ஆட்டமிழக்க செய்திருக்க முடியும், ஆனால் அந்த பிடியெடுப்பினை பஞ்சாப் அணி தவறவிட்டது.
இதனையடுத்து களமிறங்கிய ரொபின் உத்தப்பா 9 ஓட்டங்களுடன் ஏமாற்ற, அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ராகுல் டி வட்டியா ருத்ரதாண்டம் ஆடினார்.
ஆம்! செல்டோன் கொட்ரேல் வீசிய 18ஆவது ஓவரில் ராகுல் டி வட்டியா ஐந்தாவது பந்தில் மட்டும் டொட் வைக்க, மீதமிருந்த ஐந்து பந்துகளையுமே எல்லைக் கோட்டுக்கு வெளியே பறக்கவிட்டார்.
இந்த ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடங்களாக 30 ஓட்டங்கள் ராஜஸ்தான் அணிக்கு கிடைக்க, வெற்றி ராஜஸ்தான் அணி பக்கம் திரும்பியது.
இதற்கு முன்னதாக பஞ்சாப் அணி பக்கமே வெற்றி சாய்ந்திருந்த நிலையில், ராகுல் டி வட்டியாவின் இந்த அதிரடி போட்டியின் முடிவையே மாற்றிவிட்டது.
முன்னதாக நிதான துடுப்பாட்டத்தை கடைபிடித்த அவர், 23 பந்துகளுக்கு 17 ஓட்டங்கள் மட்டுமே பெற்றிருந்தார். பின்னர் 8 பந்துகளுக்கு 36 ஓட்டங்களை பெற்றார்.
எனினும் அணியை வெற்றிக்கு அருகில் நிறுத்திவைத்து விட்டு 18.6ஆவது ஓவரில் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு களமிறங்கிய ரியான் பராங் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். ஜொப்ரா ஆர்செர் 3 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் அடங்களாக 13 ஓட்டங்களையும், டொம் கர்ரன் 1 பந்துக்கு 4 ஓட்டங்களையும் பெற ராஜஸ்தான் அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.
இதனால் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, நடப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது.
பஞ்சாப் அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 1 வெற்றி, இரு தோல்விகளை பதிவுசெய்துள்ளது.
இதில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும், செல்டோன் கொட்ரேல், ஜேம்ஸ் நீஷம் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 85 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ராஜஸ்தான் வீரர் சஞ்சு சம்சன் தெரிவுசெய்யப்பட்டார்.