புலம்பெயர்ந்தோர் மூலமாக பிரித்தானியவுக்குள் கணிசமாக போதைப்பொருள் நுழைவதாக ஆய்வில் தகவல்!

சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தட்காரர்கள் மூலமாக பிரித்தானியாவுக்குள் போதைப்பொருட்கள் கணிசமாக நுழைவதாக “The Telegraph” செய்திச் சேவையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு பிரான்சிலிருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள், போதைப்பொருள் வில்லைகளை விழுங்கி, அவற்றை பிரித்தானியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு வழங்கினால், அவர்களுக்கு இலவச அல்லது குறைந்த விலையில் எல்லைய கடக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் கடத்த ஒப்புக்கொள்ளும் சில புலம்பெயர்ந்தோருக்கு VIP முறையில் எல்லையை கடக்கும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருளை கடத்தும் குற்றவாளிகள் புலம்பெயர்ந்தோர் படகுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இணைகிறார்கள்.
பிரித்தானியாவில் குடியேறிகள் தங்க வைக்கப்பட்டவுடன், உள்துறை அலுவலக ஹோட்டல்களில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பொதுவாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினர்களுக்கு கைமாற்றப்படும் என்று ஆட்கடத்தட்காரர் ஒருவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் உள்துறை அலுவலகம் மற்றும் தேசிய குற்றவியல் நிறுவனத்தின் அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு “The Telegraph” இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.
பிரித்தானியாவின் எல்லைகளை கடப்பதற்காக ஆட்கடத்தட்காரர்களும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களும் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.



