சிவனருள் பவுண்டேசனால் மாணிக்கமடு கிராமத்திற்கு வாழ்வாதார உதவி வழங்குதல் நிகழ்வு…

இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் மாணிக்கமடு கிராமத்திற்கு இலண்டனில் வசிக்கும் திரு.நிரஞ்சன் அவர்களின் நிதி அனுசரணையில் சிவனருள் பவுண்டேசனால் கடந்த வருடம் ஒரு குடும்பத்திற்கு அறுபதாயிரம் பெறுமதியான ஆடு வளர்ப்பிற்கான உதவிகள் பதினைந்து குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இச்செயற்றிட்டங்களின் கீழ் ஆடுவளர்ப்பை மேற்கொண்ட குடும்பங்களில் பன்னிரெண்டு குடும்பங்கள் தங்களுக்கு பெருகிய ஆடுகளில் ஒரு ஆடு வீதம் அக்கிராமத்தில் உள்ள ஏனைய குடும்பங்களுக்கு வழங்குவதற்கு முன் வந்திருந்தனர்.
இதன்படி கிடைக்கப்பெற்ற 12 ஆடுகளில் இரு ஆடுகள் வீதம் தெரிவு செய்யப்பட்ட புதிய 06 பயனாளிக் குடும்பங்களுக்கு நேற்றய தினம் 16ம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சிவனருள் அறக்கட்டளை ஸ்தாபகர் வைத்திய கலாநிதி ஜெ.நமசிவாயம், சிவனருள் ஒன்றியம் திரு அ.கமலமூர்த்தி , அம்பாறை மாவட்ட செயலக இந்துசமய கலாச்சார உத்தியோகத்தர் திரு. பி.ஜெயராஜ், சிவனருள் பவுண்டேசன் செயலாளர் திரு.வே.வாமதேவன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.