இலங்கை

காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்கி உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள் – ஜனாதிபதி!

மொரகஹகந்த நீர்த் தேக்கத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காணிகளை இழந்தவர்களுக்கு பொருத்தமான இடங்களில் காணிகளை வழங்கி தனக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அனைத்து அதிகாரிகளையும் ஒரே இடத்திற்கு அழைத்து, ஏனைய காணிப் பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி, மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ளவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஹிம்பிலியாகட கிராம சேவகர் பிரிவின் நாகவனாராம விகாரை வளாகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற “ஜனாதிபதி கிராமத்துடன் உறவாடல்” நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றி ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி பங்குபற்றிய “கிராமத்துடனான உறவாடல்” இரண்டாவது நிகழ்ச்சித்திட்டம் இதுவாகும். முதலாவது நிகழ்ச்சித்திட்டம் கடந்த வாரம் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெலங்விட்ட கிராமத்தில் இடம்பெற்றது.

நீண்டகாலமாக தீர்க்கப்படாது உள்ள கிராமிய மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடி அவற்றை அதிகாரிகளுக்கு முன்வைத்து உடனடித் தீர்வுகளை வழங்குவது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

நாட்டின் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களை சந்திப்பதுவும் ஜனாதிபதியின் மற்றுமொரு நோக்கமாகும். வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கெம்புருஓய, லேடியங்கல, அலியாவல, வெஹெரகல, ஹிம்பிலியாகட மற்றும் அதனை சூழவுள்ள பல கிராமவாசிகள் ஜனாதிபதியினை சந்தித்து தங்களது மனக் குறைகளை ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிப்பதற்காக நாகவனாராம விகாரைக்கு வருகை தந்திருந்தனர்.

வருகை தந்திருந்த பெரும்பாலானவர்களின் காணி சம்பந்தமான பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன. நீண்டகாலமாக தீர்க்கப்படாது உள்ள ஹெட்டிபொல நகரில் பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினையாக உள்ள காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுயதொழிலாக பால் பண்ணைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.

அவர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதற்கு உதவ வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய பண்ணை வள அபிவிருத்தி சபையுடன் கலந்துரையாடி அவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் வசதிகளை செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார். குறைந்த தொகைக்கு பசுக்களை வழங்குவதற்கு குறித்த நிறுவனங்களுக்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளாக பகுதியளவு நிறைவு செய்யப்பட்டுள்ள ஹெட்டிபொல சிறுநீரக, இரத்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை விரைவாக நிறைவு செய்து, அதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

தம்புல்ல, கண்டி, குருணாகலை மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளுக்கு சென்று சிறுநீர் சுத்திகரிப்பு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளிகளுக்கு இதன் மூலம் பெரும் நன்மை கிடைக்குமென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

வெஹெரகலைவுக்கும் பெட்டிப்பொல நகரத்திற்கும் இடையிலான 2.8 கிலோமீற்றர் மற்றும் ஹிம்பிலியாகட கிராமத்திற்கு செல்லும் வீதிகளை உடனடியாக அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

பாடசாலை கல்வியை நிறைவு செய்த பிரதேசத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி அதிகளவில் அவர்களை அதன் மூலம் பயிற்றப்பட்ட ஊழியர்களாக உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அதில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி இளைஞர்களை ஊக்குவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker