இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி குறித்து அணித்தலைவர்கள் கருத்து!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டியின் வெற்றி, தோல்விக் குறித்து அணித்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேற்று ஹாமில்டனில் நடைபெற்ற இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது பரபரப்பான ரி-20 போட்டியில், இந்தியா அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 3-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள இந்தியா அணி ரி-20; தொடரைக் கைபற்றியுள்ளது. இதன்மூலம் நியூஸிலாந்து மண்ணில் முதல்முறையாக ரி-20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
இந்த நிலையில் இப்போட்டி நிறைவடைந்த பிறகு, இப்போட்டியின் வெற்றிக் குறித்து இந்தியா அணியின் தலைவர் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்தார். அவர் கூறிய கருத்துகள் இவை,
”ஒரு கட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்து விடுவோம் என்று நினைத்தேன். கேன் வில்லியம்சன் துடுப்பெடுத்தாடியதை பார்த்த வகையில், அவருக்காக வருத்தம் அடைகிறேன். கடைசி பந்தை விக்கெட்டை நோக்கி வீச வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். இல்லை என்றால் ஒரு ஓட்டம் எடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ரோஹித் சர்மாவின் துடுப்பாட்டம் மிகவும் அற்புதம். இரண்டு இன்னிங்சிலும், கடைசி இரண்டு பந்திலும் சிறப்பு. அவர் ஒரு பந்தை தூக்கினால் பந்து வீச்சாளர் நெருக்கடிக்கு உள்ளாவார் என்பது எங்களுக்குத் தெரியும்.
நாங்கள் தொடரை 5-0 எனக் கைப்பற்ற விரும்புகிறோம். ஆனால், இந்த நேரத்தில் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சைனி, வொஷிங்டன் சுந்தர் இந்த சீதோஷ்ண நிலையில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறோம்” என கூறினார்.
இப்போட்டியின் தோல்விக் குறித்து நியூஸிலாந்து அணி அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் கூறிய கருத்துக்கள் இவை,
‘சுப்பர் ஓவர்கள் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதனால் வழக்கமான நேரத்தில் போட்டியை முடிக்க முயற்சி செய்வது அவசியம். அனைத்துத் துறையிலும் சிறப்பாக செயற்பட்டோம். இந்திய அணி அபாரமான ஆரம்பத்தை பெற்றபின், சிறப்பாக பந்து வீசி அவர்களை கட்டுப்படுத்தினோம். இவ்வளவு முயற்சி செய்து விளிம்பில் வந்து தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆனால் இந்த போட்டியில் சிறு இடைவெளியில்தான் தோல்வியை சந்தித்தோம். கடைசி மூன்று பந்துகளில், இந்தியாவின் அனுபவத்தை நாங்கள் பார்த்தோம். அவர்களிடம் இருந்து கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி, வீரர்களுடன் சிறந்த இணைப்பாட்டம் அமைத்தது அருமை” என கூறினார்.
இதனைத் தொடர்ந்து இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா கூறிய கருத்துக்களை இவை,
இது என்னுடைய முதல் சுப்பர் ஓவர். எனவே என்ன செய்யவேண்டும், முதலில் ஒரு ஓட்டம் எடுத்துவிட்டுக் கடைசி 3 பந்துகளில் அடிக்கவேண்டுமா, அல்லது முதல் பந்திலிருந்தே அதிரடியாக துடுப்பெடுத்தாட வேண்டுமா என்பன எல்லாம் புதிராக இருந்தன.
நான் நன்றாக விளையாடினாலும் ஆட்டமிழந்த விதத்தில் ஏமாற்றமடைந்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் விளையாட எண்ணியிருந்தேன். சுப்பர் ஓவரில் தொடர்ந்து விளையாடி, பந்துவீச்சாளரின் ஒரு தவறுக்காகக் காத்திருந்தேன்.
முதல் இரு ரி-20 போட்டிகளில் நான் சரியாக விளையாடாததால் சிறப்பாக விளையாட எண்ணினேன். முக்கியமான போட்டிகளில் முக்கியமான வீரர்கள் நன்கு விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும்’ என கூறினார்.
இப்போட்டியில் 65 ஓட்டங்களையும், சுப்பர் ஓவரில் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.