பிரித்தானிய கழிவு கொள்கலன் குறித்த சர்ச்சை: ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு – இராஜாங்க அமைச்சர்

ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னம்பெரும தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய கழிவுகள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஹேலீஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட கழிவுப் பொருள் கொள்கலன்கள் உகந்த செயன்முறையின் கீழ் கொள்வனவு செய்யப்படவில்லை. அத்தோடு கொள்வனவு செயன்முறைக்கு முதலீட்டு சபையின் அனுமதியும் பெறப்படவில்லை.
மேலும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் பரிந்துரைகளையும் ஹேலீஸ் நிறுவனம் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
இதன் அடிப்படையிலேயே ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கொள்கலன்களை உள்நாட்டிற்குள் போக்குவரத்து செய்ய முடியாது என்ற தடைக்கு எதிரான உத்தரவை விதிக்கவேண்டும் என தெரிவித்து ஹேலிஸ் நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.